திருவழிபாடு ஆண்டு - B திருவருகைக்காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 2024-12-12
முதல் வாசகம்
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். ]
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.
“யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.
ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.
பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
திருப்பாடல் 145: 1,9. 10-11. 12-13
1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ய உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
எசா 45: 8
அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே
உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்'' (மத்தேயு 18:14)
சிறு குழந்தைகளை இயேசு அன்போடு வரவேற்றார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உண்டு. குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத அக்காலத்தில் உண்மையான சீடர் குழந்தையைப் போல மாற வேண்டும் என்று இயேசு கேட்டது வியப்பாகத் தோன்றலாம். குழந்தைகள் தம் பெற்றோரையோ வேறு பெரியவர்களையோ சார்ந்துதான் வாழ முடியும். அவர்களுடைய நலமான வளர்ச்சிக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் தேவை. சீடரும் சிறுபிள்ளைகளைப் போல இருக்க வேண்டும் என்பது அவர்கள் கடவுள்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் எனப் பொருள்படும். கடவுளைச் சார்ந்துதான் நம்மால் வாழ முடியுமே ஒழிய, நம் சொந்த சக்தியால் நாம் எதையும் சாதிக்க இயலாது. எனவே, கடவுளின் அரசில் நாம் பங்குபெற வேண்டும் என்றால் நாமும் கடவுளின்முன் சிறுபிள்ளைகளைப் போல மாற வேண்டும். இவ்வாறு இயேசுவின் சீடராக மாறுகின்றவர்கள் நன்னெறியில் நடக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அவர்களுக்கு யாதொரு தீங்கும் ஏற்படலாகாது என்பதில் கடவுள் கருத்தாயிருக்கிறார்.
-- சிறு பிள்ளைகளைப் போல நாமும் கடவுளை அணுகிச் செல்லும்போது நமது மன நிலை மாற்றம் பெற வேண்டும். கடவுளையே முழுமையாக நம்பி நாம் வாழும்போது நமது சொந்த விருப்பப்படி நடவாமல் கடவுளின் விருப்பப்படி நடக்க நாம் முயல்வோம். அதுபோலவே, பிறரும் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருக்க நாம் அவர்களுக்குத் துணை செய்வோம். தவறிப்போன ஆட்டினைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கின்ற ஆயரைப் போல நம் கடவுளும் நம்மைத் தேடி வருகின்றார். அவரது அன்பிலிருந்து அகன்று சென்றுவிடாமல் நாம் அவர் காட்டுகின்ற வழியில் எந்நாளும் நடந்திட வேண்டும். அப்போது இயேசுவின் உண்மையான சீடராக நாம் வாழ்வோம்.
மன்றாட்டு:
இறைவா, சிறு பிள்ளைகளின் உள்ளத்தோடு உம்மையே எந்நாளும் நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
|