இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 34வது வாரம் புதன்கிழமை 2024-11-27
முதல் வாசகம்
கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 15: 1-4
சகோதரர் சகோதரிகளே, யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன்.
அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: ``கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை.
ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.
திருப்பாடல்98: 1. 2-3. 7-8. 9
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி
7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி
9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்'' (லூக்கா 21:5)
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றொரு கூற்று உண்டு. ஊர் மக்கள் சென்று வழிபடுவதற்கென்று பொருத்தமான இடம் வேண்டும். இது நம் மரபில் ஆழ வேரூயஅp;ன்றிய கருத்து. சில ஊர்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்குப் போதிய வீடுகள் இருக்காது. ஆனால் கோவில் மட்டும் பிரமாண்டமாக இருக்கும். ஏன் இந்த முரண்பாடு என்று கேட்டால் கடவுளுக்கு உகந்த இருப்பிடம் கொடுப்பது நம் கடமையல்லவா என்னும் பதில் வரும். மாபெரும் கோவில்களைக் கட்டி எழுப்பவது தவறு என இயேசு கூறவில்லை. கடவுளுக்கு உகந்த இல்லிடமாக அழகு மிகுந்த கோவிலைக் கட்டுவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் வெறும் அலங்காரத்திற்காக மாபெரும் ஆலயங்களை எழுப்பிவிட்டு, கடவுள் உறைகின்ற கோவிலாகிய மனிதர்களை நாம் மறந்துவிட்டால் அங்கே முதன்மைகள் பலியாகிப் போகின்றன. கட்டடங்களில் உறைபவர் அல்ல நம் கடவுள். அவர் வாழ்கின்ற கோவில் மனித உள்ளமும் இதயமுமே. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரை மதித்து, அவர்களை மாண்போடு நடத்துவது நம் பொறுப்பு. நம் கடவுள் அவ்வாறே நம்மை நடத்துகிறார்.
இப்பொறுப்பை மறந்துவிட்டு, வெறும் கட்டடங்கள் வழியாக நாம் கடவுளை நிறைவுசெய்ய எண்ணினால் அது தவறுதான். இயேசு ஆடம்பரங்களை விரும்பவில்லை; கடவுள் குடிகொண்டிருக்கின்ற மக்களை மதிக்காமல் அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கட்டடத்தின் அழகை மட்டும் பெருக்கிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. மனிதரின் தலைசிறந்த படைப்பும் ஒருநாள் அழிந்துபோகும். எழில் மிகுந்த எருசலேம் கோவிலும் கி.பி. 70இல் தரைமட்டமானது. ஆனால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரைக் கடவுள் நிலைவாழ்வு பெற அழைத்துள்ளார். அந்த வாழ்வை நாம் பெற வேண்டும் என்றால் இப்போது, இங்கே, இவ்வுலகில் நாம் மனிதரில் கடவுளின் சாயலைக் காண வேண்டும்; அதை மதிக்க வேண்டும். கடவுள் மனிதர் மட்டில் எண்பிக்கின்ற அன்பு நம் வாழ்விலும் துலங்க வேண்டும். இதுவே கடவுளை எந்நாளும் கண்டு மகிழ்வதற்கு வழி. இதுவே கடவுள் ''தரிசனை'' பெறுவதற்கு இயேசு காட்டுகின்ற வழி.
மன்றாட்டு:
இறைவா, உம் எழில்மிகு படைப்பாக நீர் உருவாக்கிய மனிதர்களை நாங்கள் மதித்து வாழ்ந்திட அருள்தாரும்.
|