இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 32வது வாரம் திங்கட்கிழமை 2024-11-11
முதல் வாசகம்
நான் உனக்குப் பணித்தபடியே மூப்பர்களை ஏற்படுத்தும்.
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9
அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன்.
இந் நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர் தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன். இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும்.
தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில் சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின் மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது.
மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம், ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும் எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
கடவுளின் முகத்தைத் தேடும் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல் 24: 1-2. 3-4. 5-6
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி
3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி
5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்' என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.''
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ``எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: ``கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''திருத்தூதர்கள் ஆண்டவரிடம், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'
என்று கேட்டார்கள்'' (லூக்கா 17:5)
''நம்பிக்கை'' என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஏதாவது ஒரு பொருள்பற்றிக் கருத்துத் தெரிவித்தல் ''நம்பிக்கை'' எனக் கொள்ளப்படலாம். நாம் ஒரு கருத்துத் தெரிவிக்கும்போது, வேறு மனிதர் வேறு கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என ஏற்றுக்கொள்கிறோம். நாம் உண்மை என ஏற்பதையும் ''நம்பிக்கை'' எனலாம். இப்பொருளில் ''சமய நம்பிக்கை'' பற்றிப் பேசுகிறோம். இதற்கு நேர்மாறாக ''மூட நம்பிக்கை'' இருக்கிறது. அதாவது நாம் உறுதியாக ஏற்கின்ற ஒரு கருத்துக்கு உண்மையான ஆதாரம் இல்லை என்பது இதன் பொருள். இவை தவிர, நம்பிக்கை என்றால் ''எதிர்காலத்தில் நிகழவிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி குறித்து நாம் தெரிவிக்கின்ற எதிர்பார்ப்பு'' என்றும் பொருள்படலாம். நாளை மழை பெய்யும் என நம்புகிறேன் என்று ஒருவர் கூறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, சீடர்கள் இயேசுவிடம் ''எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' (லூக்கா 17:5) என்று விடுத்த வேண்டுகோளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
இங்கே ''நம்பிக்கை'' என வருகின்ற சொல் பழைய விவிலியத் தமிழ் பெயர்ப்பில் ''விசுவாசம்'' என்றிருந்தது. விசுவாசம் என்பது வடமொழி என்பதால் அதை நல்ல தமிழில் ''நம்பிக்கை'' என்று கூறுகிறோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் ''நம்பிக்கை'' என்பது ஆழ்ந்த பொருள் கொண்டது. இதன் முதல் பொருள் ''கடவுளை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வது'' என்பதாகும். கடவுள் தம்மையே நமக்கு இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாலும், அந்த வெளிப்பாட்டின் வழியாகக் கடவுள் நம்மோடு உரையாடுகிறார் என்பதாலும், நாம் கடவுளோடு உறவாட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் ''ஆம்'' என்று பதிலளிக்கும்போது நாம் கடவுளிடத்தில் நம் ''நம்பிக்கை''யை வெளிப்படுத்துகின்றோம். எனவே நம்பிக்கை என்பதற்குப் ''பற்றுறுதி'' என்னும் பொருள் உண்டு. கடவுளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது கடவுள் தம் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார் என்றும், அவர் நம்மைக் கைவிடார் என்றும் நாம் உறுதியாக ஏற்கிறோம். இதுவும் நம்பிக்கையின் பொருள்ஆகும். இங்கே நம்பிக்கையோடு ''எதிர்நோக்கல்'' இணைந்திருப்பதைப் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் ''நம்பிக்கை''யும் ''எதிர்நோக்கும்'' மிக நெருங்கிய விதத்தில் பிணைந்தவை. அவற்றோடு ''அன்பு'' என்னும் பண்பையும் நாம் சேர்த்தால் இம்மூன்றும் கடவுளோடு நமக்கு உறவு ஏற்படுத்துகின்ற வழிகளாக மாறுவதை நாம் பார்க்கலாம். இதைத் தூய பவுல் அழகாக எடுத்துரைக்கிறார்: ''ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது'' (1 கொரிந்தியர் 13:13). எனவே, திருத்தூதர்கள் இயேசுவிடம், ''எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று எழுப்பிய வேண்டுதல் நமது வேண்டுதலாகவும் மாறவேண்டும். நம் வாழ்க்கையில் ''நம்பிக்கை'' ஆழ வேரூயஅp;ன்றினால் நாம் கடவுளிடம் கொள்கின்ற பற்று உறுதியாக இருக்கும்.
மன்றாட்டு:
இறைவா, நீர் எங்களோடு என்றும் வாழ்கின்றீர் என்னும் நம்பிக்கையை எங்களில் வளர்த்தருளும்.
|