யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-11-03

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6,திபா 18: 1-2abc,2def-3. 46,50ab (பல்லவி: 1),எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28, மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் 31 ம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். யூத சமயம் மக்களுக்குப் பல கட்டளைகளை வழங்கியிருந்தது. அக்கட்டளைகளுள் முக்கியமானது எது என்னும் கேள்விக்குப் பல யூத அறிஞர்கள் பதில் தந்தனர். இயேசுவை அணுகிச் சென்று ''அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்ட மறைநூல் அறிஞர் நல்ல எண்ணத்தோடுதான் அக்கேள்வியைக் கேட்டார். இயேசு அவருக்கு அளித்த பதில் ''கடவுளை அன்பு செய்க; மனிதரை அன்பு செய்க'' என்பதாகும். இயேசு இப்பதிலைப் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார். கடவுள் நம்மைப் படைத்து, பாதுகாத்து, அன்போடு வழிநடத்துகின்ற தந்தை. எனவே, அவரை நாம் முழுமையாக அன்புசெய்வது பொருத்தமே. அவரிடத்தில் நம்மை நாம் எந்தவித நிபந்தனையுமின்றிக் கையளித்திட வேண்டும். இது முதன்மையான கட்டளை. இதற்கு நிகரான கட்டளையாக இயேசு ''பிறரை அன்புசெய்க'' என்னும் வழிமுறையை நல்குகின்றார். நாம் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்ய அழைக்கப்டுகிறோம்.

இயேசு அன்புக் கட்டளை பற்றி அளித்த பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர் இயேசு கூறிய பதிலை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, அன்புக் கட்டளையை நிறைவேற்றுவது எருசலேம் கோவிலில் நிகழ்ந்த பலிகளை எல்லாம் விட மிகச் சிறந்தது எனக் கூறித் தம் இசைவைத் தெரிவிக்கிறார். இயேசு பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட அன்புக் கட்டளையை மக்களுக்கு மீண்டும் எடுத்துக் கூறிய நேரத்தில் அன்பு என்பது இரு பக்கங்களைக் கொண்டது எனக் காட்டுகிறார். கடவுளை அன்புசெய்வதோடு நாம் பிறரையும் அன்புசெய்ய வேண்டும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. எனவே, இயேசு கடவுளின் அன்பில் எந்நாளும் நிலைத்திருந்து, அதே நேரத்தில் நம்மை முழுமையாக அன்புசெய்து நமக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறோம். அன்பு இல்லாத இடத்தில் வேறு நற்பண்புகளும் இராது. அன்பு இருக்குமிடத்தில் தன்னலம் மறையும்; பிறருடைய நலனுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். கடவுள் நம்மை எந்தவொரு நிபந்தனையுமின்றி அன்புசெய்வது போல நாமும் முழுமையாகக் கடவுளை அன்புசெய்து, அவருடைய அன்பின் தூண்டுதலால் எல்லா மக்களையும் அன்புசெய்திட முன்வருவோம். வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
திபா 18: 1-2abc,2def-3. 46,50ab (பல்லவி: 1)

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2abc ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். - பல்லவி

2def என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். - பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50ab தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி

இரண்டாம் வாசகம்

இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28

சகோதரர் சகோதரிகளே, லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப் படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ``அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, `` `இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை'' என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ``நன்று போதகரே, `கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது'' என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ``நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை'' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மறுமை வாழ்விற்கு அழைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து இறை ஊழியர்களுக்காகவும் மன்றாடுவோம்.

வல்ல பரம்பொருளே - வானகத் தந்தையே - எம் இறைவா! விசுவாசிகளின் மந்தையாகிய திருச்சபையில் மேய்ப்புப் பணிக்கு தங்களை அர்ப்பணித்ததோடு, வலுவிழந்தவற்றைத் தேற்றவும், வலிமை கொண்டவற்றைக் கண்காணிக்கவும் செய்து, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை ஏற்றமுற நிறைவேற்றி, குறிக்கப்பட்ட காலத்தில் உம்மால் அழைத்துக் கொள்ளப்பட்டவர்களான எங்கள் திருத்தந்தையர்கள், ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் மற்றுமுள்ள துறவறத்தார்கள் உம்மோடும், உடனுள்ள அனைத்துப் புனிதர்களோடும் வானகப் பந்தியில் இடம் பெறும் வரம் வேண்டி, இறைவா! இன்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம்.

கருணைத் திருவுருவே - காத்து நிற்கும் பேரருளே - எம் இறைவா! நரை திரை பருவங்களில் நலிவுற்று மரித்தவர்கள் - பிணிகளின் தாக்கத்தால் நம்மைப் பிரிந்து சென்றிருப்பவர்கள் எதிர்பாரா விபத்திற்கு இலக்காகி இறந்தவர்கள் - இத்தகு விசுவாசிகள் இறை இரக்கத்திற்கு உள்ளாகவும், இவர்களை வான்வீடு வரவேற்றுக் கொள்ளவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

மெய்யங்கடவுளை அறியாது வையகத்தில் வாழ்ந்து மறைத்திருக்கும் ஆன்மாக்களுக்காக மன்றாடுவோம்.

எல்லை காணா பேரன்பே - இரக்கத்தின் ஊற்றே - எம் இறைவா! மண்ணக மகவாக பிறப்பெடுத்து, பாவம் போக்கும் பலியாக இன்னுயிரை ஈந்து, மனுக்குலத்திற்கு மீட்பு எனும் பெருங்கொடையை வழங்கியிருக்கும் திருச்சுதன் இயேசுவை, உலகம் முழுமையாக அறிந்து போற்றவும், புகழ்ந்து ஏற்றவும் வேண்டுகிறோம். கிறிஸ்து இயேசுவை அறியாது வாழ்ந்து மரித்திருக்கும் ஆன்மாக்கள் மீது வானகக் கொடையாம் மீட்பு வழங்கப்படும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

ஏழ்மையில் வாடுவோருக்கு இரக்கம் காட்டப்படவும், இறை இரக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம்.

எளியோரின் அருட்சுனையே - வறியோரின் பெருந்துணையே - எம் இறைவா! ‘ஏழைகளே! நீங்கள் பேறு பெற்றோர்” - என்கிறார் திருக்குமாரன் இயேசு. ‘எளியோரின் புலம்பலையும், வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இறைவன் எழுந்து வருகிறார்” என்கிறது திருப்பாடல். இல்லாதார்க்கு நாங்கள் இரக்கம் காட்டவும், உமது இரக்கத்தை அதன் கைம்மாறாக நாங்கள் பெற்று மகிழவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் உலகின் மேல் அன்பு கூர்ந்த தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் மனமாற்றம் பெற்று, நீர் எமக்குக்காட்டும் அன்பையும், பரிவையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்ந்திட அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா!

ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?"

முதன்மையான கட்டளை எது? அன்பு செய்வது. சரி. இரண்டாவது இடத்தில் உள்ள கட்டளை எது? அன்பு செய்வது.அதுவும் சரி. மூன்றாவது இடத்தில் உள்ள கட்டளை எது? அன்பு செய்வது. எல்லா கட்டளைகளுக்கும் மூலம், ஆதாரம், அடிப்படை அன்புதான்.எனவேதான் எல்லா கட்டளைகளையும் சுருக்கி இரண்டு கட்டளையாக்கினார். அதையும் இயேசு சுருக்கி "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்"(யோவா 13:34) என்னும் புதிய கட்டளையை; கொடுத்தார். ஆகவே சட்டங்கள், கட்டளைகள் எல்லாம் யாருக்கு? முதலாவது, இரண்டாவது என்று தரம் பிரிப்பது யாருக்கு? அன்பு வற்றி வரண்டுபோன சமுதாயத்திற்கு கட்டளைகளும் சட்டங்களும் அவசியம். காவல்துறையும் நீதிமன்றமும் கட்டாயத் தேவையாகிவிடுகிறது. தாயும் தகப்பனும் பிள்ளைகளும் பாசப்பிணைப்பில்வாழும் குடும்பத்திற்கு என்ன சட்டம் வேண்டும்? கொடுத்து எடுத்து வாழ்வதற்கு யார் இவர்களுக்குச் சட்டம் இயற்றுவது? எனவேதான் எல்லா சட்டங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அன்பு ஒன்றையே சமுதாயத்தின் தாரக மந்திரமாக்கச் சொல்லுகிறார் இயேசு. இதுவே இறையாட்சியின் தொடக்கம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.