யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் புதன்கிழமை
2024-11-01

புனிதர் அனைவர் பெருவிழா




முதல் வாசகம்

பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டி லிருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, ``எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்'' என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், ``அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது'' என்று உரத்த குரலில் பாடினார்கள். அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். ``ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்'' என்று பாடினார்கள். மூப்பர்களுள் ஒருவர், ``வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?'' என்று என்னை வினவினார். நான் அவரிடம், ``என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்'' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: ``இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல்கள் 24: 1-2. 3-4. 5-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' (லூக்கா 6:12)

இயேசு இறைவேண்டலில் பல மணி நேரம் செலவழித்தார் என நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இவ்வாறு இறைவேண்டலில் ஈடுபட்டார். இதற்கான காரணத்தை நாம் தேடினால் இயேசு எப்போதுமே தம் தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருப்பதில் நிலைத்திருந்தார் எனக் கண்டுகொள்ளலாம். கடவுளோடு அவருக்கு இருந்த உறவு சாதாரண மனித உறவு போன்றதன்று. மாறாக, இயேசு கடவுளின் மகன் என்பதாலும், தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் தம் தந்தையின் விருப்பப்படி நடப்பதையே தம் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்தார். கடவுளிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையானதாக இருந்தது. எனவே, எது கடவுளின் விருப்பமோ அதுவே இயேசுவின் விருப்பமுமாக அமைந்தது. பன்னிரு திருத்தூதரை இயேசு தேர்ந்தெடுத்தபோதும் அவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தபோதும் அவர்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதையே தங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொள்ளவேண்டும் என இயேசு விரும்பினார்.

நம் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கின்ற வேளையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின்போதும் நாம் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுளின் விருப்பத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் நாம் கடவுளோடு நெருங்கிய உறவுப் பிணைப்பால் இணைந்திருக்க வேண்டும். இது இறைவேண்டல் வழியாக நிகழ்கிறது. கடவுளின் உடனிருப்பு நம்மோடு உள்ளது என்னும் உணர்வில் நாம் தோய்ந்திருப்பதுதான் இறைவேண்டலுக்கு அடிப்படை. இது ஒருவித தியான மன நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும். கடவுளின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடியிலும் உணரும்போது அவருடைய பார்வையிலிருந்து நாம் அகன்றுபோதல் இயலாது. அவரோடு இணைந்து நாம் செயல்படுவோம். நம்மில் இறைவேண்டலும் பணிவாழ்வும் பிணைந்திருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை அறிந்து செயல்படுத்துவதில் நிலைத்திருக்க அருள்தாரும்.