இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 30வது வாரம் செவ்வாய்க்கிழமை 2024-10-29
முதல் வாசகம்
திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். ``இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்'' என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன். எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வது போலத் தம் மனைவியின்மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5 (
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின'' என்று கூறினார். மீண்டும் அவர், ``இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''பின்பு இயேசு, ''இறையாட்சி...ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும்.
ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று.
வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின' என்றார்'' (லூக்கா 13:18-19)
கடுகு விதை மிகச் சிறிது. தமிழ் இலக்கிய மரபிலும் கடுகு, தினை மற்றும் ஆல விதைகள் சிறுத்திருப்பது பற்றிய கூற்றுக்கள் உண்டு. ''கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று திருக்குறளைப் புகழ்கின்றார் இடைக்காடர். தினையையும் பனையையும் ஒப்பிடுவார் வள்ளுவர் (குறள் 104). சிறிய விதையிலிருந்து வானோக்கி வளர்ந்து விரிகின்ற ஆல மரம் அரசனின் படைக்கு நிழலாகும் என்பதும் இலக்கிய வழக்கு. அதுபோல இயேசு கடுகு பற்றி ஒரு சிறு உவமை வழி இறையாட்சியின் தன்மையை விளக்குகிறார். பாலஸ்தீன நாட்டில் கடுகு வகைகள் பல உண்டு. அவற்றுள் ஒருவகை 10 அடி வரை வளர்ந்து ஓங்கும் மரமாக உயர்வதுண்டு. இயேசு தொடங்கிவைத்த இறையாட்சியும் சிறிய அளவில் ஆரம்பமானாலும் மிக உயர்ந்தும் விரிந்தும் வளர்ந்தோங்கும் தன்மையது. பழைய ஏற்பாட்டில் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: எசே 17:22-24). அது 50 அடி வரை வளர்ந்து பெருமரமாகக் காட்சியளிக்கும். ஆனால் இயேசு இறையாட்சியை அத்தகைய பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடவில்லை. மாறாக, மிகச் சிறிய விதையிலிருந்து தோன்றி வளர்கின்ற ஒரு சிறு மரத்திற்கு அதை ஒப்பிடுகிறார். நோயுற்ற மனிதர்களுக்கு நலமளிப்பதும், மக்களுக்கு இறையாட்சி பற்றிச் சொல்லாலும் செயலாலும் போதிப்பதுமே இயேசுவின் பணியாக இருந்தது. சிறிய அளவில் தொடங்கிய அப்பணி உலகளாவிய பெரும் பணியாக விரியும். எல்லா மனிதர்களும் இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க இயலும்.
வானத்துப் பறவைகள் என்னும் உருவகம் வழியாக இயேசு இறையாட்சி என்பது எல்லா மக்களையும் வரவேற்கின்ற இடம் எனக் காட்டுகிறார். பறவைகள் மரத்தில் கூடு கட்டும். மரத்துக் கனிகளை உண்டு மகிழும். கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடும். இறையாட்சியும் அவ்வாறே என்க. மனிதர்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைக்கும்போது கடவுளின் ஆட்சியில் பங்கேற்பார்கள். அவர்களது இதயத்தில் கடவுள் பற்றிய உணர்வு ஆழப்படும். தங்கள் இதயக் கதவுகளை அவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் திறந்துவிடுவார்கள். பிறரது இன்பதுன்பங்களில் பங்கேற்பார்கள். இவ்வாறு கடவுளாட்சி என்பது எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்தி அவற்றை உறுதிப்படுத்துகின்ற தன்மையது.
மன்றாட்டு:
இறைவா, மனித வாழ்வு சிறு தொடக்கமாயினும் நிறைவை நோக்கி நீர் எங்களை வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.
|