இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 29வது வாரம் செவ்வாய்க்கிழமை 2024-10-22
முதல் வாசகம்
இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் ஒன்றுபடுத்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-22
சகோதரர் சகோதரிகளே, ஒரு காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும், வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அன்னியர்களாகவும், எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள். ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.
ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.
பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.
அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.
கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.
திருப்பாடல் 85: 8-9. 10-11. 12-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
! மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்காக எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.
அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது
உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்'' (லூக்கா 12:35-36)
தமிழகத்தில் ஆண்கள் வேட்டி அணிவதுபோல அக்காலத்தில் யூதர்கள் நீண்ட அங்கி அணிவது வழக்கம். எனவே, ஏதாவது ஓடியாடி வேலை செய்ய நேர்ந்தால் ஆடையை மேலே தூக்கிக் கட்டிக்கொள்வார்கள். அப்போது காலசைவு எளிதாகும். இதையே இயேசு ''உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்'' என்கிறார் (லூக் 12:35). மேலும், யூத மக்களுக்கு இச்சொற்றொடர் முற்காலத்தில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வை நினைவுபடுத்தியது. அதாவது, எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட யூத மக்கள் கடவுளின் வல்லமையால் மோசேயின் தலைமையின்கீழ் விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கொண்டாடினார்கள். அது பாஸ்கா விழா (''கடந்து செல்லல் விழா'') என்றழைக்கப்பட்டது. அன்று பாஸ்கா ஆட்டினை நெருப்பில் வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரைகளோடும் உண்ண வேண்டும் என்னும் சட்டம் இருந்தது. அதை உண்ணும் முறை: ''இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள்'' (காண்க: விப 12:11). ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ''விரைந்து'' செயல்படுமாறு யூதர்கள் எச்சரிக்கப்பட்டனர். அதுபோலவே, இயேசுவும் தம் சீடர்களை நோக்கி, ''விழிப்பாயிருங்கள்'' என்றும் ''தயாராயிருங்கள்'' என்றும் கூறினார். மேலும் நீதிமொழிகள் நூலில் ''ஞானம்'' ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு, சுறுசுறுப்பாகச் செயல்படுவது குறிக்கப்படுகிறது: ''சுறுசுறுப்புடன் அவள் (''ஞானம்'') வேலை செய்வார்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்... அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது'' (காண்க: நீமொ 31:17-18). இயேசுவும் சீடர்களை நோக்கி, அவர்களுடைய ''விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்'' எனக் கூறுகிறார் (லூக் 12:35).
யூதர்கள் பாஸ்கா விழாவின்போது புளியாத அப்பத்தை உண்டனர். எனவே, புளிப்பு மா அப்போது தவிர்க்கப்பட்டது. இயேசுவும் தம் சீடர்களிடம் ''பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்'' என ஏற்கெனவே கூறியிருந்தார் (காண்க: லூக் 12:1). ஆக, சீடர்கள் ''விழிப்பாய் இருக்க வேண்டியது'' எது குறித்து என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். முதலில் சீடர்கள் பரிசேயரைப் போல வெளி அனுசாரங்களோடு நின்றுவிடக் கூடாது. இரண்டாவது, சீடர்கள் ''நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்'' என்பதை எப்போதும் கருத்தில் கொண்டு, மானிடமகன் வரும்போது அவரை வரவேற்க தயாராய் இருக்க வேண்டும். தொடக்க காலத் திருச்சபை இந்த ''விழிப்பு நிலை'' பற்றித் தெளிவாக உணர்ந்திருந்தது. எந்த நேரத்திலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழலாம் என அவர்கள் எதிர்பார்த்ததுண்டு. ஆயினும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக நிகழாது என்று அறிந்ததும் அவர்கள் தம்மைத் தேடி ஒவ்வொரு கணமும் வருகின்ற கடவுளைத் திறந்த உள்ளத்தோடும் தாராள இதயத்தோடும் ஏற்றிட ''விழிப்பாய்'' இருக்கக் கற்றுக் கொண்டார்கள். அதுபோலவே, கடவுளின் பதிலாளாக நம்மைத் தேடி வந்த இயேசுவைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த ''ஆண்டவராக'' ஏற்ற அவர்கள் தம் தலைவரை எப்போதும் தம் இதயம் என்னும் இல்லத்தில் ஏற்றிட ''விழிப்பாய்'' இருக்க அறிந்திருந்தனர். இன்று வாழ்கின்ற நாமும் கடவுளின் வருகையையும் இயேசுவின் உடனிருப்பையும் உணர்ந்தவர்களாக, ''விழித்திருந்து'' வாழ்பவர்களாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். அப்போது நம் இதயக் கதவைத் தட்டுகின்ற நம் இறைவனை நம் அன்போடு ஏற்று வரவேற்று உபசரிப்போம்.
மன்றாட்டு:
இறைவா, எங்களைத் தேடி வருகின்ற உம்மை விழித்திருந்து வரவேற்றிட எங்களுக்கு அருள்தாரும்.
|