திருவழிபாடு ஆண்டு - B 2024-10-20
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 53:10-11,பதிலுரைப்பாடல்: திபா. 33:4-5, 18-20,22,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4:14-16,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45)
திருப்பலி முன்னுரை
அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத்தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 53:10-11
அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!.
பதிலுரைப்பாடல்: திபா. 33:4-5, 18-20,22
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதி யையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.ஆண்டுகளுக்கும் ஈடாக எம்மை மகிழச் செய்யும். பல்லவி:
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி:
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி:
இரண்டாம் வாசகம் அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4:14-16சகோதரர் சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்: எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45
அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் ஆயரே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உம்மைப் போல் நல்லாயர்களாய் மக்களை ஒருங்கிணைத்து அன்பின் வழியில் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
வாழ்வளிக்கும் இறைவா!
நீர் மக்களைப் பஞ்சத்திலிருந்து விடுவித்து வாழ்விக்கின்றவராக இருக்கிறீர்.நாட்டில் வறுமையினால் பரிதவிக்கும் மக்களை அரவணைத்து வாழ்வளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
ஆறுதல் அளிப்பவரே எம் இறைவா! உமது மக்கள் கொடிய நோய்கள், கடன் பாரங்கள் போன்ற பல்வேறு துன்பங்களுக்கு உட்பட்டு மன அமைதி இல்லாமல் தவிக்கின்றார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட நீரே ஆறுதாக இருக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அனைத்திற்கும் முதலானவரே இறைவா! நாட்டை ஆட்சி செய்கின்ற தலைவர்கள், நான் என்ற ஆணவத்தினால் தன்னலம் கருதாமல் மக்கள் நலம் கருதி நல்லாட்சி புரிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
நோய் தீர்க்கும் வள்ளலே எம் இறைவா!
பலவித கொடிய நோய்களால் அவதிப்படுகின்ற உம் மக்களுக்கு நீரே மருத்துவராக இருந்து, அவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அன்பின் பிறப்பிடமே இறைவா! நான்தான் அனைத்திற்கும் தலைவன் என்று பிறரின் துன்பங்களைக் கண்டு சிரித்து வாழும் மக்களாக வாழாமம் பிறரின் துன்பங்களைக் காணும்போது உதவி செய்யும் மக்களாக எங்களை வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
துன்புற அழைப்பவராம் இறைவா, உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பயணத்தைப் பின்பற்றி, இறையாட்சியின் இலட்சியங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
1பேதுரு 1: 18 – 25
தூய்மையான உள்ளம்
ஓர் ஆன்மாவின் மீட்பு என்பது விலைமதிக்க முடியாதது. அதனை இந்த உலகத்தின் வெள்ளி, தங்கத்தைக் கொண்டு மீட்க முடியாது. இந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் ஒருவன், அதனை வைத்து தன்னுடைய ஆன்மாவையோ, அல்லது அடுத்தவருடைய ஆன்மாவையோ மீட்க முடியாது. ஏனென்றால், ஆன்மா அழிவில்லாதது. முடிவில்லாதது. அழியக்கூடிய செல்வத்தைக் கொண்டு, நாம் அழிவில்லாத ஆன்மாவை மீட்க முடியாது. மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்று, பேதுரு குறிப்பிடுவது அவர்களது நடத்தை சார்ந்த பொருளில் அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளிலிருந்து கொடுக்கிறார்.
மோசே அவர்களுக்கு கடவுளின் சட்டங்களைக் கொடுத்தார். அந்த சட்டங்களை அவர்கள் விளக்கங்கள் கொடுத்து, தங்களுக்கு ஏற்புடையதாக்கி, அதனுடைய உண்மையான கருத்தை மறக்கச்செய்து, தங்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு விரோதமான காரியங்களைச் செய்தார்கள். அதுதான் இங்கு பாவமாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த பாவத்தை இயேசு தூய்மையான உள்ளத்தினால் அழித்தொழித்து நமக்கு புது வாழ்வு தந்திருக்கிறார். அந்த தூய்மையான வாழ்விற்கு பல உதாரணங்களை நாம் இயேசுவின் வாழ்க்கையில் பார்க்கலாம். குறிப்பாக, சிலுவையில் உயிர்விடுகிற தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை மனதார மன்னிக்கிறார். இது இயேசுவின் தூய்மையான உள்ளத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
அத்தகைய தூய்மையான உள்ளம் நமதாக வேண்டும். அத்தகைய தூய்மையான உள்ளத்தோடு நாம் மற்றவர்களுக்கு அன்பு காட்ட வேண்டும். அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து கொள்ள நாம் வழிகாட்டிகளாய் அமைய வேண்டும். அந்த உன்னதமான பணியை நாம் அனைவரும் சிறப்பாக செய்வோம்.
மன்றாட்டு:
இறைவா, அழிந்துபோகும் செல்வத்தை நம்பி வாழாமல் உம் முன்னிலையில் செல்வம் கொண்டவர்களாக மாறிட எங்களுக்கு அருள்தாரும்.
|