திருவழிபாடு ஆண்டு - B 2024-10-06
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம். 2:18-24,பதிலுரைப்பாடல்: திபா. 128:1-6,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 2:9-11,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16)
திருப்பலி முன்னுரை
இறையாட்சிக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நாம் அனைவரும் உறவில் ஒன்றித்திருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்கள் எல்லோரும் கடவுளின் படைப்புகளாகிய இயற்கையோடும், மற்ற மனிதர்களோடும் ஒன்றித்து வாழ வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. சிறப்பாக அனைத்து உறவுகளுக்கும் உயிர் கொடுக்கும் திருமண உறவு பற்றி இயேசு பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்பில் ஒன்றித்திருக்க கடவுளால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். அதே வேளையில், குழந்தைகளைப் போல தூய உள்ளம் கொண்டவர்களுக்கே இறையாட்சியில் இடம் கிடைக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். சிறு பிள்ளைகளைப் போன்று இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்:
தொடக்க நூலிலிருந்து வாசகம். 2:18-24
அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: உம் வாழ் நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக.
பதிலுரைப்பாடல்: திபா. 128:1-6
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி:
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி:
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி:
இரண்டாம் வாசகம் தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 2:9-11சகோதர,சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்: அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். (1 யோவா. 4:12) அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16
அக்காலத்தில் பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார். அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவரிகளிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள். "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார். பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்பின் இறைவா! திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள். அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினரை நிறைவாக ஆசிர்வதித்து உமது அன்புப் பாதையில் அவர்களை வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
படைப்பின் நாயகனே எம் இறைவா! உமது சாயலில் படைத்த மனிதர்களின் தீயச்செயல்களையும் வஞ்சக எண்ணங்களையும் மாற்றி உமக்குரிய மக்களாக அவர்கள் வாழவேண்டிய அருளைப் பொழிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
கருணையின் கடலே எம் இறைவா!
இன்றைய உலகில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்களின் நல்வாழ்விற்காக மன ஒற்றுமையையும் மன அமைதியையும் கொடுத்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
மீட்பின் நாயகனே எம் இறைவா!
நீர் சிறிது காலம் வானதூதரை விடச் சற்றுத் தாழ்ந்தவராகவே வாழ்ந்தீரே உம்மைப் போல நாங்களும் தாழ்ச்சி நிறைந்த குணமுடையவர்களாக வாழ் வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
5 உமது பெயரை என் சகோதர, சகோதரிகளுக்கு அறிவிப்பேன் என்று கூறிய இறைவா!
உம்மைப் பற்றி அறியாத மக்களுக்கு உமது பெயரின் மேன்மையையும் மாட்சியையும் எடுத்துக் கூறும் மக்களாக எங்களை மாற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
துன்பங்களை நீக்குபவராம் இறைவா, உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
துன்புற அழைப்பவராம் இறைவா, உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பயணத்தைப் பின்பற்றி, இறையாட்சியின் இலட்சியங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''பரிசேயர் இயேசுவை அணுகி, 'கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?'
என்று கேட்டு அவரைச் சோதித்தனர்'' (மாற்கு 10:2)
ஒரு பொருள் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பும்போது நாம் அவர்களிடம் அப்பொருள் பற்றிக் கேள்வி கேட்கிறோம். ஆனால் கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலரோ பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் நேர்மையான உள்ளத்தோடு அவரை அணுகியதுண்டு. ஆனால் வேறு சிலரோ ''இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்'' அவரிடம் கேள்வி கேட்டார்கள். மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒரு மறு கேள்வியைக் கேட்கிறார்: ''மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' (மாற் 10:3). கணவன் மணவிலக்குச் சான்று எழுதி, தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதிலிறுக்கிறார்கள் (மாற் 10:4). உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி எந்தவொரு ''கட்டளை''யும் கொடுக்கவில்லை. மாறாக, மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே சட்டம்.
எவ்வாறிருந்தாலும், அக்காலத்தில் திருமண உறவு சீர்குலையத் தொடங்கியது என்பது மட்டும் தெரிகிறது. இயேசு வீண் வாதங்களில் ஈடுபடுவர் அல்ல. அதே நேரத்தில் அவர் திருமணம் பற்றி ''படைப்பின் தொடக்கத்திலேயே'' கடவுள் வழங்கிய சட்டத்தைத் தம் எதிரிகளுக்கு நினைவூட்டுகிறார். அதாவது, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்கள் திருமண உறவில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் எனவும், ''கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்கலாகாது'' எனவும் தொடக்கத்திலிருந்தே கட்டளை தந்துள்ளார் (காண்க: தொநூ 2:24; மாற் 10:6-9). இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. கணவனும் மனைவியும் கடவுள் தங்கள் மீது காட்டுகின்ற அன்பின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை ஏற்கும்போது திருமண அன்பு நிலைத்துநிற்கும். மாறாக, தன்னலப் போக்கு குடும்பத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் குடும்ப உறவும் அதன் அடிப்படையான திருமண ஒன்றிப்பும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் கடவுளின் விருப்பம் யாதென இயேசு தெளிவாகக் கற்பிக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் திருமண மற்றும் குடும்ப உறவும் ஒற்றுமையும் இன்றைய உலகில் தழைத்தோங்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய உழைத்திட வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.
|