திருவழிபாடு ஆண்டு - B 2024-09-08
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 35:4-7,பதிலுரைப்பாடல்: திபா 146: 7. 8-9a. 9bc-10 ,திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2:1-5,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37)
திருப்பலி முன்னுரை
நன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவில் செயல்பட்ட கடவுளின் வல்லமையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர்கள் முன்னறிவித்த இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறியதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. அற்புதங்கள் செய்கின்றவராகிய நம் ஆண்டவரை நம்பிக்கையோடு தேடிச் சென்று நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நமது உடல், உள்ளக் குறைகளை நீக்க அவரால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார். நம் ஆண்டவரைப் போன்று பிறருக்கு நன்மை செய்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
காது கேளாதோரின் செவிகள் கேட்கும் வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 35:4-7
உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள்" பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்:
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு:
பதிலுரைப்பாடல்: திபா 146: 7. 8-9a. 9bc-10
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்.பல்லவி
9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி
இரண்டாம் வாசகம் ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2:1-5என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள் " என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே போய் நில் " என்றோ அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார் " என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37
அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா " அதாவது "திறக்கப்படு " என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன: நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பரம்பொருளான இறைவா!
உம் திருஅவையிலுள்ள திருப்பணியாளர்கள் அனைவரும் பணிவு, தாழ்ச்சி ஆகிய உயரிய நோக்கங்களை தங்கள் சொல்லிலும், செயலிலும் கடைபிடித்து, உம் வர்த்தைகளைப் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டிய ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
இரக்கத்தின் இறைவா!
இயேசுவின் இரக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த புனித அன்னை தெரசாவைப் போல இரக்கம் நிறைந்தவர்களாய் வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
வாழ்வின் இறைவா! நாம் எந்த நிலையில் இருந்தாலும் இறைவன் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். அதுபோல் நிறைகுறையோடு வாழும் மனிதர்களை முழுமையாக ஏற்று அன்பு செய்து வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
பாதுகாக்கும் தெய்வமே இறைவா! நாங்கள் பிறர் துன்பங்களில் பங்கெடுத்து வேதனைகளைப் பகிர்ந்து பாசத்தை வெளிப்படுத்தும் நல்ல மனிதர்களாக வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
ஆறுதலின் தெய்வமே இறைவா! குடும்பங்களிலும் நாம் வாழும் பகுதிகளிலும் ஊன முற்ற சகோதர, சகோதரிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
விடுதலை தருபவராம் இறைவா, தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற் றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள் நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அருளின் ஊற்றாம் இறைவா, உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,
தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,
உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்'' (மாற்கு 7:33)
யூத இனத்தைச் சேராத பிற இன மக்கள் வாழ்ந்த பகுதி தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகும். இயேசு அப்பகுதிகளுக்குச் சென்றார் என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 7:31). அங்கே பிற இனத்தைச் சார்ந்த ஒருரை - காது கேளாவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை - இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்குக் குணம் நல்கிய நிகழ்ச்சியை மாற்கு தத்ரூயஅp;பமாகச் சித்தரிக்கிறார். அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் இல்லை, கேள்வித் திறனும் இல்லை. தாம் போதித்தவற்றை மக்கள் கவனமாகக் ''கேட்க வேண்டும்'' என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மாற் 7:6). அவரிடம் வாய்திறந்து சாதுரியமாக ''பேசிய'' ஒரு பெண்ணின் கோரிக்கையை இயேசு நிறைவேற்றி வைத்தார் (காண்க: மாற் 7:24-30). இப்போது இயேசு ஒரு மனிதருக்குப் ''பேசும்'' திறனையும் ''கேட்கும்'' திறனையும் அளிக்கிறார். ''பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது'' (சாஞா 10:21) என்னும் இறைவாக்கின் அடிப்படையில் இயேசு அம்மனிதருக்கு உள்ளறிவையும் ஞானத்தையும் அளித்தார் எனலாம்.
தனியே அழைத்துச் செல்லுதல், விரல்களைக் காதுகளில் இடுதல், உமிழ்நீரால் தொடுதல் ஆகிய செயல்களை மாற்கு குறிப்பிடுவதன் வழியாக இயேசு உண்மையிலேயே ஒரு ''மருத்துவராக'' செயல்பட்டார் என அறிகிறோம். ஆனால் வெளி அடையாளம் என்பது உள் எதார்த்தத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசு அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் கேள்வித் திறனும் வழங்கிய போது அந்த மனிதரின் உள்ளத்தைத் திறந்தார்; அவருடைய இதயத்தைத் திறந்தார்.அதைத் தொடர்ந்து, கடவுளின் வார்த்தையைக் ''கேட்கவும்'' அதைப் ''பேசவும்'' அந்த மனிதர் முன்வந்தார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நமக்கு இத்தகைய கேள்வித் திறனையும் பேச்சுத் திறனையும் நல்குவார். அப்போது நாம் இயேசுவை மாயஜாலம் நிகழ்த்துகின்ற அதிசய மனிதராகப் பார்க்காமல் கடவுளின் அன்பை நம்மோடு பகிர்கின்ற இறைமகனாக நம்பி ஏற்போம்.
மன்றாட்டு:
இறைவா, எங்களுக்கு இறைஞானம் அளித்து நல்வழி காட்டும் இயேசுவிடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள அருள்தாரும்.
|