யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் புதன்கிழமை
2024-08-28

புனித மொனிக்கா




முதல் வாசகம்

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10,16-18

அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல; மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். `உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில் இயேசு கூறியது: ``வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; `எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்' என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ...நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை'' (மத்தேயு 23:13-14)

இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பலர். அவர்கள் நடுவே யூத சமயத்தின் நுணுக்கங்களைத் தெரிந்த மறைநூல் அறிஞரும், சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடித்துவந்த பரிசேயரும் இருந்தனர். அவர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலேயே கடினமானவை. அவர்களை இயேசு ''வெளிவேடக்காரர்கள்'' என்று கூறிக் கடிந்துகொண்டார். சமய நெறியை விளக்குகிறோம் என்று சொல்லி மக்கள்மீது கடினமான சுமையைச் சுமத்திவிட்டு, தாங்கள் மட்டும் அந்த நெறிப்படி நடக்காமல் இருந்த அந்த வெளிவேடக்காரர்களைப் பின்பற்றலாகாது என்று இயேசு கூறினார். அவர்களுடைய தவறான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டிய இயேசு அவர்கள் விண்ணரசில் நுழைவதுமில்லை, விண்ணரசில் நுழைய விரும்புவோரை விடுவதுமில்லை என்றுகூறிக் கடிந்தார். இக்கருத்தைக் கவிதையாக வடித்த கண்ணதாசன் இயேசுவின் எதிரிகளை ''வைக்கோற் போரில் படுத்த நாய்''க்கு ஒப்பிடுவது கருதத்தக்கது: ''வைக்கோற் போரில் படுத்த நாய்போல் தானுண்ணாமல் உண்ண விடாமல் தடுக்கும் உமக்கு ஐயோ கேடு!'' (இயேசு காவியம், பாடல் எண் 108, பக். 283).

பிறருக்கு நல்லதே செய்ய வேண்டும் என இயேசு வழங்கிய போதனையை மறந்துவிட்டு அவர்களுக்குத் தீங்கிழைக்க முனைவோர் இயேசுவின் வழியில் நடக்க மறுக்கின்றனர். அவர்கள் நல்லது செய்வதுமில்லை, பிறர் நல்லது செய்ய விடுவதுமில்லை. இத்தகையோர் நடக்கும் வழி அழிவுக்கே இட்டுச்செல்லும். மாறாக, இயேசுவைப் போல நாமும் பிறருக்காக வாழ்ந்தால் விண்ணரசில் புகுந்திடத் தகுதி பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு நன்மை செய்வதில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.