யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-08-18

(இன்றைய வாசகங்கள்: நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6,திருப்பாடல் 34: 1-2. 9-10. 11-12. 13-14,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஞானத்துக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் திருவுடலையும், திரு இரத்தத்தையும் உண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக் கிறது. உலக பொருட்களில் பற்றுள்ளவர்களாய் வாழாமல், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஞானமுடையவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் திகழ்ந்து, கடவுள் தருபவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ இயேசு நம்மை அழைக்கிறார். நாம் வாழ்வு பெறுவதற்காக, அவர் தன்னையே நமக்கு உணவாக தருகிறார். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசுவின் சதையாலும், இரத்தத்தாலும் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6

ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திருப்பாடல் 34: 1-2. 9-10. 11-12. 13-14

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி

11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? பல்லவி

13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 6:56
அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?\'\' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந் திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றே இறைவா,

உமது திருமகனின் சதையாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெறும் திருச்சபையின் மக்கள் அனைவரையும், ஞானத்தோடும் விவேகத்தோடும் வழிநடத்தும் வலிமையை எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வின் தொடக்கமே இறைவா,

உலகிற்கு வாழ்வளிப்பதற்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசுவில் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் நிலை வாழ்வை மக்கள் அனைவரும் பெற்று மகிழவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் பிறப்பிடமே இறைவா,

எங்கள் நாட்டு மக்களும், தலைவர்களும் உமது அன்பின் அரசை விரும்பித் தேடவும், அதன் மூலம் நீர் வழங்கும் அருள்வாழ்வைப் பெற்று நீதியிலும் அன்பிலும் உண்மை நெறியிலும் வளர்ச்சி காணவும் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குணமளிக்கும் மருத்துவரே இறைவா,

உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக் கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் இறைவா!

பல்வேறு மொழி, சமயம், இனம், பண்பாடு ஆகியவற்றால் பரந்து விரிந்திருக்கும் எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உமது ஆசியை நிறைவாக பொழிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நீதியின் அரசராம் இறைவா,

உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், உள்நாட்டு கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் உமது உதவியை நாடவும், தீமையை வெறுத்து, நன்மையையும் நீதியையும் தேடி நல்ல வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே' என்றார்'' (யோவான் 6:47-48)

நாம் உணவு உட்கொள்ளும்போது அந்த உணவு நம் உடலில் புகுந்து தன் சக்தியால் நம் உடலைப் புதுப்பிக்கிறது; நமக்குச் சத்து வழங்கி நாம் வளர்வதற்குத் துணையாகிறது. உணவு இல்லாதிருந்தால் நம் உடல் படிப்படியாக வாடி வதங்கி மடிந்துபோகும். இயேசு தம்மையே நமக்கு உணவாகக் கொடுக்கின்றார். இயேசு ''வாழ்வுதரும் உணவு நானே'' என்று கூறியதைக் கேட்ட மக்கள் அவர் கூறிய சொற்களின் பொருளை மேலெழுந்தவாரியாக மட்டுமே பொருள் புரிந்துகொள்கின்றனர். எனவேதான் அவர்கள் ''இம்மனிதர் தம்மையே உணவாக நமக்குத் தர முடியுமா?'' என்று தமக்குள்ளே கேட்டுக்கொண்டு ''முணுமுணுக்கின்றனர்''. மேலும், இயேசு தம்மை ''வானிலிருந்து வந்த உணவாக'' அறிமுகம் செய்ததும் அவர்களுக்கு விபரீதமாகப் பட்டது. இயேசுவின் தாயும் தந்தையும் குடும்பமும் அவர்களுக்குத் தெரிந்திருக்க, அவர் தாம் ''வானிலிருந்து வந்ததாக''க் கூறுவது சரியாகாதே என அவர்கள் நினைத்தனர். இங்கேயும் நாம் ஒரு முரண்பாட்டைக் காண்கிறோம். அதாவது, வாழ்வு தரும் உணவாக வருகின்ற இயேசு தம்மையே பலியாக்குகிறார். அவர் பலியாக இறப்பதுதான் நமக்கு வாழ்வாக மாறுகிறது. பிறருக்கு வாழ்வு தர வேண்டும் என்றால் நாமும் நம்மைப் ''பலியாக'' அர்ப்பணிக்க வேண்டும். நம் உயிரை இழக்கும்போதுதான் நாம் பிறருக்கு வாழ்வு அளிக்க இயலும். இயேசு அவ்வாறே செய்தார். சிலுவையில் அவர் தம் உயிரை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்து நமக்கு ''நிலைவாழ்வை'' அவர் வழங்கினார். இயேசுவின் சீடராக வாழ விரும்புவோரும் இயேசுவைப் பின்பற்றித் தம் உயிரையே காணிக்கையாக்கும்போதுதான் பிறருக்கு அவர்கள் வாழ்வு தரும் ஊற்றாக அமைந்திட இயலும்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு வாழ்வளிக்கும் உணவாக நாங்கள் மாறிட அருள்தாரும்.