இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 17வது வாரம் திங்கட்கிழமை 2024-07-29
புனித அல்போன்சா
முதல் வாசகம்
தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: ``நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.'' ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.
எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: ``நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை.'' ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன்.
பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: ``எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.'' அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை" என்கிறார் ஆண்டவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
இணைச்சட்டம்32: 18-19, 20-21
`உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்'. 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி
20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி
21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.''
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்" (மத்தேயு 13:44)
கடவுளாட்சி எத்தகையது என்று விவரிக்க இயேசு கூறிய ஒரு சிறிய உவமை "மறைந்திருந்த புதையல்" பற்றியதாகும். இந்த உவமையில் வருகின்ற அடிப்படைக் கருத்தை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் நாம் எதிர்பாராமலே சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதுண்டு. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்வதற்காகத்தான் அந்த மனிதர் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ எக்காலத்திலோ புதைத்துவைத்த புதையல் அவருடைய கண்களுக்குத் தென்பட்டது. திட்டமிட்டுத் தேடிச் சென்று கண்டுபிடித்த புதையல் அல்ல அது. மாறாக, எதிர்பாராவண்ணம் அவரைத் தேடி வந்த செல்வம் அது. பிறருடைய பொருளை அவருடைய இசைவின்றி எடுத்துக்கொள்வது தவறு என்பதை இவண் சுட்டிக்காட்டவேண்டும். எனவே, எதிர்பாராமல் வந்த புதையலை, வேறு யாருக்கோ சொந்தமான புதையலை, அந்த மனிதர் தமக்கென்று எடுத்துக்கொண்டது சரியல்ல என நாம் வாதாடலாம். அதே நேரத்தில், நமது சொந்த முயற்சியால், நமது உழைப்பால் உருவாகாத செல்வங்கள் நம்மைத் தேடிவருவதும் உண்டு. அப்போது அச்செல்வத்தை நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொண்டு, நன்மை செய்ய அதைப் பயன்படுத்துவது நலமான செயலே எனலாம்.
நம்மைத் தேடிவரும் செல்வம் யாது? கடவுள் நமக்கு இயல்பாகவே வழங்கியுள்ள கொடைகளை நாம் நினைத்துப் பார்க்கலாம். அனைத்திற்கும் அடிப்படை, கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்துக் காத்துவருதாகும். நம்மை அன்போடு ஏற்றுப் பேணுகின்ற மனிதரைப் பெற்றோராக, நண்பராக நாம் பெறுவதும் கடவுளின் கொடையே. கடவுள் நம்மைக் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டதும் கொடையே. இவ்வாறு நம்மைத் தேடிவருகின்ற செல்வங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவேளைகளில் நமக்குள்ளேயே மறைந்திருக்கின்ற புதையல்களும் உண்டு. நம்மில் புதைந்துகிடக்கின்ற திறமைகள் ஏராளம். காலப் போக்கில் நமது கவனக்குறைவால் புதைந்துபோகின்ற கொடைகளும் உண்டு. அவற்றைத் தோண்டி வெளிக்கொணர்ந்து, உலகம் வாழப் பயன்படுத்துவது சிறப்பு. பிறர் தம் திறமைகளைக் கண்டுகொள்ள நாம் அவர்களுக்குத் துணைசெய்யலாம் என்பதையும் இவண் குறிப்பிடலாம். ஆக, "மறைந்திருக்கும் புதையல்" அப்படியே மறைந்திருந்தால் அதனால் யாருக்கும் பயனிராது. மாறாக, அப்புதையலை நாம் வெளிக்கொணர்ந்து, அதைப் பயன்படுத்தி நல்லது செய்தால் அது நமக்கும் நலம் பயக்கும், பிறருக்கும் பயனுடையதாகும். அப்போது, கடவுளின் கொடை வீணாகப் போகாமல் கடவுளின் மாட்சியைப் பறைசாற்ற நமக்குத் தூண்டுதலாக அமையும்.
மன்றாட்டு:
இறைவா, நாங்கள் கண்டுபிடிக்கும் வண்ணம் எங்கள் வாழ்வில் புதையல்களை மறைத்துவைத்ததற்கு நன்றி!
|