இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 14வது வாரம் திங்கட்கிழமை 2024-07-08
முதல் வாசகம்
முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம் செய்துகொள்வேன்
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16,19-20
ஆண்டவர் கூறுவது: ``நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆக்கோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள்.
அந்நாளில், `என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்; `என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்'' என்கிறார் ஆண்டவர்.
``இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மணஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்
திருப்பாடல் 145: 2-3. 4-5. 6-7. 8-9
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். பல்லவி
6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். 7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, ``என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்.
ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்'' என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார்.
இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
ஏனெனில் அப்பெண், ``நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்'' எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ``மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், ``விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)
சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.
மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.
மன்றாட்டு:
இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.
|