திருவழிபாடு ஆண்டு - B 2024-06-30
(இன்றைய வாசகங்கள்:
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். 1: 13-15, 2: 23-24,பதிலுரைப்பாடல்: திபா. 30: 1, 3-5, 10-12,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்: 8:7,9, 13-15,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 5: 21-43)
திருப்பலி முன்னுரை
அன்புக்குரியவர்களே, புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆண்டவர் இயேசுவுக்கும், அன்னை மரியாவுக்கும் தவிர, திருச்சபை கொண்டாடும் ஒரே பிறப்பு விழா திருமுழுக்கு யோவானுக்கு மட்டும்தான். இதிலிருந்தே அவரது சிறப்பையும், தனித் தன்மையையும் அறிந்துகொள்ளலாம். உலகத்திற்கு மீட்பைக் கொண்டு வந்த இயேசுவுக்கே திருமுழுக்கு அளிக்கும் பேற்றினை அவர் பெற்றிருந்தார். மெசியாவைச் சுட்டிக்காட்டும் கொடையையும் அவர் கொண்டிருந்தார். பழைய ஏற்பாட்டின் கடைசி இறைவாக்கினராகவும், புதிய ஏற்பாட்டின் முதல் இறைவாக்கினராகவும் திகழ்கிறார் எனவும், அவரைப் புதிய எலியா” என்று அழைப்பதும் பொருத்தமானதே. மெசியா வருவதற்கு முன் இறைவாக்கினர் எலியா மீண்டும் தோன்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி, யூதர்கள் இயேசுவிடம் வினவியபோது, எலியா ஏற்கனவே வந்துவிட்டார்” என்று திருமுழுக்கு யோவானைப் பற்றிக் குறிப்பிட்டார் இயேசு. இறைவனின்மீது கொண்ட ஆர்வத்தால் நெருப்பெனப் பற்றியெறிந்த இறைவாக்கினர் எலியா போலவே, திருமுழுக்கு யோவானும் தீயெனப் பற்றி எரிந்தார். இந்த விழாவில் நாமும் இறைவாக்கினராக, இயேசுவைப் பிறருக்குச் சுட்டிக்காட்டுபவராக, ஆன்மீக ஆர்வத்தால் பற்றி எரிபவராகத் திகழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். 1: 13-15, 2: 23-24
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
பதிலுரைப்பாடல்: திபா. 30: 1, 3-5, 10-12
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி
ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி
இரண்டாம் வாசகம் இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது: அவர்களுடைய குறையை நீக்குங்கள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்: 8:7,9, 13-15சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக,எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது: அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை " என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.(2திமொ 1:10) அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 5: 21-43
அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் " என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் " என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்? " என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், "என்னைத் தொட்டவர் யார்? " என்கிறீரே! " என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு " என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? " என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் " என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் " என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். "சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம் " என்றார். அதற்கு,"" சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு " என்பது பொருள்." உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் தலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது " என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்: அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்..
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நல்லாயனே எம் இறைவா! உமது பணியினைத் தங்கள் வாழ்வில் ஏற்று, உமது அன்பினைப் பறைசாற்றும் திருஅவையின் உஊழியர்களை உமது அன்பினால், அரவணைத்து வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
நம்பிக்கையின் நாயகனே இறைவா!
யாயிரின் மகனை உயிரோடு எழுப்பியது போல், எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கின்ற துன்பங்களிலிருந்து மீண்டு எழ வரமருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
கருணைக்கடலே இறைவா! குடும்பங்களிலும், சமூகத்திலும் வரும் சவால்களைக் கண்டு மனம் சோர்வடையாமல் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய ஆற்றலைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அன்பின் இறைவா!
ஏழை, எளிய மக்கள் மேல் அன்பு கொண்டு, அவர்களின் துன்பங்களில் நாங்களும் பங்குகொண்டு, அவர்களின் சுமைகளைத் தாங்கும் மனநிலையைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
நலமளிக்கும் இறைவா! இரத்தப் போக்குடைய பெண் உம்முடைய ஆடைகளைத் தொட்டாலே போதும், நான் நலம்பெறுவேன் என்ற நம்பிக்கையில் அவள் குணம்பெற்ற அந்த ஆழ்ந்த நம்பிக்கையில் நாங்கள் உம்மைத் தேட வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அழைத்தலின் நாயகனே இயேசுவே,
‘பெண்களின் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை’ என்று திருமுழுக்கு யோவானைப் பெருமைப்படுத்தினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் அவரைப் போல, பிறருக்கு உம்மைச் சுட்டிக்காட்டும் முன்னோடிகளாக வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உற்ற துணைவராம் இறைவா,
இங்கு ஒன்றாக குழுமியுள்ள எங்களை நிறைவாக ஆசிர்வதித்து நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையில் வேரூன்றி, அன்றாடம் அதை வாசித்து, சவால்கள் நிறைந்த உலகில் நிறைந்த பலன் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வரங்களைப் பொழிபவராம் இறைவா, எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது நிழலில் புகலிடம் தேடும் இறையாட்சியின் மக்களாக வாழவும், உடல், உள்ள, ஆன்ம நலன்களில் வளரவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம் 'தலித்தா கூம்' என்றார்.
அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள்.
உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள்'' (மாற்கு 5:41-42)
பன்னிரண்டு என்னும் எண் தனிப்பொருள் உடையது என்பது யூதர்களின் கருத்து. இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த சிறுமிக்கு வயது பன்னிரண்டு. சிறுவயதில் இறப்பது ஒரு பெரிய இழப்புதான். அக்கால வழக்கப்படி பன்னிரண்டு வயதான பெண் திருமணத்திற்குத் தகுதி பெற்று, குழந்தைப் பேறு அடையும் பருவத்தை எய்தியவர். அவ்வயதில் இறக்க நேர்ந்தால் தாய்மைப் பேறு இன்றி இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்ற அவல நிலை அவருக்கு ஏற்படும். அது குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கமாகும். இயேசுவைப் பார்க்கச் சென்ற தொழுகைக் கூடத் தலைவர் யாயிர் தம் மகள் இறந்துபோகும் தறுவாயில் இருப்பதாகத் தான் முதலில் தெரிவித்தார். ஆனால் பிறகு தம் மகள் இறந்துவிட்டாள் என்னும் செய்தியை அவருக்குத் தெரிவிக்கிறார்கள். அச்செய்தி இயேசுவின் காதிலும் விழுகிறது. இயேசுவின் உள்ளத்தில் இரக்கம் பொங்கி எழுகிறது. அவர் யாயிரின் வீட்டுக்குள் செல்கிறார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை மட்டுமே தம்மோடு வர அனுமதிக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளின் போது இந்த மூன்று சீடர்கள் மட்டுமே இருப்பதை நாம் கருதலாம். எடுத்துக்காட்டாக, இயேசு மலை மீது தோற்றம் மாறியபோது இம்மூன்று சீடர்களும் அவரோடு இருந்தார்கள் (மாற் 9:2). எருசலேமின் அழிவுபற்றி இயேசு அறிவித்தபோது அவர்கள் இருந்தார்கள் (மாற் 13:3-4). கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருமே இயேசுவோடு இருந்தார்கள் (மாற் 14:33). எனவே, இயேசு பன்னிரு வயது நிரம்பிய சிறுமியைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழச் செய்த நிகழ்ச்சி ஒரு புதுமை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருளுடைய ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்தது.
அதாவது, இயேசு மக்களுக்கு வாழ்வளிக்க வந்தார். அவர்களுக்குப் புத்துயிர் வழங்க வந்தார். அவர்களுக்குக் கடவுளின் வாழ்வில் பங்களிக்க வந்தார். எனவே, பன்னிரு வயது நிரம்பிய சிறுமியை நோக்கி ''எழுந்திடு'' என இயேசு கூறிய சொற்கள் நாம் இயேசுவின் வல்லமையால் ஒருநாள் உயிர்பெற்றெழுவோம் என்பதற்கு முன் அடையாளமாயிற்று. சிறுமியின் தந்தையிடம் இயேசு, ''அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' (மாற் 5:36) என்று கூறினார். கடவுளால் எல்லாம் நிறைவேற்ற முடியும் என நாம் உளமார நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். அப்போது இயேசு நமக்கு வாழ்வளிப்பார். நம்மைச் சாவிலிருந்து மீட்டு நாம் இறைவனோடு என்றென்றும் வாழ்கின்ற பேற்றினை நமக்கு அளிப்பார்.
மன்றாட்டு:
இறைவா, உம் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவும் அதனால் வாழ்வு பெறவும் அருள்தாரும்.
|