இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 11வது வாரம் புதன்கிழமை 2024-06-19
புனித ஜீலியானா
முதல் வாசகம்
இதோ! நெருப்புத் தேரில் எலியா விண்ணகத்துக்குச் சென்றார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2: 1, 6-14
ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, �ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு� என்றார். அதற்கு அவர், �வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்� என்றார்.
ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர். அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.
அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்துகொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர். அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, �உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்� என்று கேட்டார்.
அதற்கு எலிசா, �உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!� என்றார். எலியா அவரை நோக்கி, �நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது� என்றார். இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். எலிசா அதைக் கண்டு, �என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!� என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காண முடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கொண்டார்.
மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார். பின்பு அவர், �எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?� என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரை நம்புவோரே, உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.
திருப்பாடல் 31: 19. 20. 23
19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி
20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி
23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும்
சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்' என்றார்'' (மத்தேயு 6:2)
மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய ''மலைப் பொழிவு'' மைய இடம் பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும் இறையாட்சி பற்றிய நற்செய்தியை ''அதிகாரத்தோடு'' அறிவித்தார் (மத் 7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள் யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு இயேசு ''மலைப் பொழிவின்'' போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில் இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான் வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும், தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு உணர்த்தியது.
இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும் அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு நான் செய்யும் உதவி வெறும் ''வெளிவேடம்'' என இயேசு கூறுகிறார். தர்மம் செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப் பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும் என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும் பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
மன்றாட்டு:
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.
|