யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-06-16

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 17: 22-24,பதிலுரைப்பாடல் திபா. 92: 1-2, 12-15,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம். 5: 6-10,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைவனுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். இறையாட்சியின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த இறையாட்சி தானாக முளைத்து வளரும் விதையைப் போலவும், பெரிய மரமாக வளர்ந்து பறவைகளின் உறைவிடமாக மாறும் சிறிய கடுகு விதையைப் போன்றும் இருக்கிறது. இறைவனின் விருப்பத்தின்படி இந்த இறையாட்சி உலகெங்கும் விரிந்து பரவி வருகிறது. நாமும் இறையாட்சியின் தூதுவர்களாக செயலாற்றும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 17: 22-24

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும். ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்: நான் செய்து காட்டுவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.
பதிலுரைப்பாடல் திபா. 92: 1-2, 12-15

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று: உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று பல்லவி:

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்: லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி:

அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்: என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்: 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்: அவரே என் பாறை: அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி:

இரண்டாம் வாசகம்

எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம். 5: 6-10

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.நாம் துணிவுடன் இருக்கிறோம்.இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவாக்கு வித்தாகும்: கிறிஸ்துவே விதைப்பவர்: அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில் இயேசு, "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்: ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது " என்று கூறினார். மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும் " என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வழிநடத்தும் இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவறத்தார் அனைவரும் உமது திருஅவையின் மக்கள் அனைவரையும் உம்மோடும், பிறரோடும் நல்லுறவு கொண்டவர்களாய் வாழ வரமருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

அருள் பொழிபவராம் இறைவா!

எம் நாட்டுமக்கள் அனைவரும் நீர் படைத்த வளங்களை நல்வழியில் பயன்படுத்தவும், நிலங்களை நல்ல விவசாயம் செய்து பாதுகாத்திடவும் வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

இறைவார்த்தையை வாழ்வாக்கிய எம் இறைவா!

நாங்கள் நல்ல நிலத்தில் விழுந்து நல்ல செடியாக, மரமாக வளர்ந்து கனி கொடுக்கவும், இறைவார்த்தையைக் கேட்டு அதை வாழ்வாக்கவும் வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தரும் எம் இறைவா!

நாங்கள் பிறருக்கு உதவி செய்து வாழவும், கைம்பெண்கள். அனாதைகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வாழவும் வேண்டிய வரமருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா!

நிலம் நல்ல விளைச்சலைத் தருவது போல, உம் படைப்பாகிய நாங்கள் தளிராகவும், கதிராகவும், தானியங்களாலும் பலன் தர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நட்டு வளர்ப்பவராம் இறைவா,

சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்டு, உலகெங்கும் செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் திருச்சபையின் மக்கள் அனைவரும், இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும், உலகில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் இறையாட்சியின் தூதுவர்களாக செயல்படவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உற்ற துணைவராம் இறைவா,

நிலையற்ற எங்கள் உடலுக்காக பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் நாங்கள், நிலையான உலகில் வாழத் தேவையான நன்மைகளை செய்து, உமது நீதித் தீர்ப்பின் தண்டனைக்கு ஆளாகாதவாறு உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வரங்களைப் பொழிபவராம் இறைவா,

எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது நிழலில் புகலிடம் தேடும் இறையாட்சியின் மக்களாக வாழவும், உடல், உள்ள, ஆன்ம நலன்களில் வளரவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''நிலத்தில் ஒருவர் விதைக்கிறார்... அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது'' மாற்கு (4:27)

விவசாயப் பின்னணியிலிருந்து இன்னொரு உவமையை எடுத்துக் கூறுகிறார் இயேசு. வயலில் விதைக்கச் செல்லுமுன் மண் நன்றாகப் பண்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதைத்த பிறகு அவ்விதை நிலத்தில் வேரூயஅp;ன்றுகிறது; தளிர் தோன்றுகிறது; இலை வளர்கிறது; பூ மலர்கிறது; கதிர் வெளியாகித் தானியம் உருவாகிறது. இச்செயல்களில் எதையுமே விவசாயி செய்வதில்லை; மாறாக, இயற்கையே செய்கிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இயற்கையின் செயல்கள் நிகழ்ந்து, மனிதருக்கு வளமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு இயேசு மக்களுக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். அதாவது, கடவுளாட்சியை இவ்வுலகுக்குக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுபவர் கடவுள்தாம். மனிதர் தம் சொந்த முயற்சியால், கடவுளின் துணையின்றி, கடவுளாட்சியை மலரச் செய்ய இயலாது.

இதனால், கடவுளாட்சியை மலரச் செய்வதில் மனிதருக்குப் பங்கே இல்லை என்று நாம் தவறாக முடிவுகட்டிவிடல் ஆகாது. கடவுளோடு இணைந்து மனிதர் உழைக்கும் போது கடவுள் ஆட்சி அங்கே மலர்கின்றது. அப்போது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறை மனிதருக்கு இயல்பான ஒன்றாக மாறும். அதுவே இறையாட்சியின் மலர்ச்சி. அத்தகைய ஆட்சியைக் கொணர்வதுதான் தம் பணி என்று இயேசு முழங்கினார். அவரோடு இணைந்து மனிதர் செயல்படும்போது அவருடைய இறையாட்சிப் பணி விரிவடையும்; மனித சமுதாயம் கடவுள் விரும்பும் சமுதாயமாக, கடவுளின் ஆட்சி நிலவும் குழுவாக மாறும். இத்தகைய புதிய சமுதாயம் இங்கே தொடங்கிவிட்டது என்றாலும் அதன் நிறைவு இறுதிக்காலத்தைச் சார்ந்தது என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, இறையாட்சி மலர நாங்கள் உம்மோடு ஒத்துழைக்க அருள்தாரும்.