யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் திங்கட்கிழமை
2024-05-20
முதல் வாசகம்

உங்கள் உள்ளத்தில் கட்சி மனப்பான்மை இருந்தால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 13-18

அன்புக்குரியவர்களே, உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும். உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது; பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல் களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
திருப்பாடல் 19: 7. 8. 9. 14

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

(2திமொ1:10) அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?'' என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை'' என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ``நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ``இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?'' என்று கேட்டார். அதற்கு அவர், ``குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ``நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று கதறினார். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ``ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே'' என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ``அவன் இறந்துவிட்டான்'' என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ``அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ``இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''உடனே அச்சிறுவனின் தந்தை, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று கதறினார்'' (மாற்கு 9:25)

தீய ஆவி பிடித்திருந்த ஒரு சிறுவனைக் குணமாக்க இயேசுவின் சீடர்கள் முற்படுகிறார்கள். ஆனால் அவர்களால் இயலவில்லை. அப்போது அச்சிறுவனின் தந்தை இயேசுவை அணுகுகிறார். ஆழ்ந்த நம்பிக்கையோடு செயல்பட்டால் ஆகாதது ஒன்றுமில்லை என இயேசு பதிலுரைக்கிறார். அப்போது அச்சிறுவனின் தந்தை இயேசுவிடம், ''நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று இறைஞ்சி வேண்டுகிறார் (காண்க: மாற் 9:25). இங்கு வருகின்ற ''நம்பிக்கை'' என்னும் சொல்லுக்கும் ''நம்பிக்கையின்மை'' என்னும் சொல்லுக்கும் தொடர்பு இருப்பதைக் காண்கிறோம். நம்பிக்கை என்பது கடவுளால் எல்லாம் கூடும் என உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது. நம்பிக்கையின்மை என்பது கடவுளின் வல்லமை குறித்து ஐயப்படுவதைக் குறிக்கிறது. நம்பிக்கையோடு கடவுளை அணுகுவோரின் வேண்டுதல் கேட்கப்படும் என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். மனிதர் கடவுளிடம் கேட்பதெல்லாம் அப்படி நிகழும் என நாம் கூறிட இயலாது. நாம் எழுப்புகின்ற எத்தனையோ வேண்டுதல்கள் கேட்கப்படாமலே போய்விடுவதுண்டு. ஆனால் நாம் கடவுள்முன் சமர்ப்பிக்கின்ற வேண்டுதல்கள் நம் உள்ளத்தை எப்போதுமே மாற்றிடும் தன்மை கொண்டவை.

இறைவேண்டல் என்பது நம் உள்ளத்தில் ஒரு மாற்றத்தைக் கொணர்கிறது. கடவுளால் எல்லாம் கூடும் என்னும் நம்பிக்கையோடு வாழ்ந்து செயல்படுகின்ற மனிதரின் வேண்டுதல் மனித கணிப்பின்படி நிறைவேறாமல் இருந்தாலும், கடவுளின் பார்வையில் நம் வேண்டுதல்கள் எப்போதுமே பொருள்செறிந்தனவே. நம் உள்ளத்தில் செயல்படுகின்ற கடவுளின் அருள் நாம் அவரை நோக்கி வேண்டும்போது நம் உள்ளத்தை மாற்றியமைக்கின்றது. ஆக, நாம் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடக்க நம் வேண்டுதல்கள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. எனவே நம் நம்பிக்கையின்மையைப் போக்கிட வேண்டும் என நாம் கடவுளை நோக்கி மன்றாடுவது எப்போதுமே நலம் கொணர்கின்ற இறைவேண்டுதலே.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நம்பிக்கையைத் தூண்டி எழுப்பியருளும்.