இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-05-19
தூயஆவி பெருவிழா
(இன்றைய வாசகங்கள்:
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11,திருப்பாடல்கள் 104:1,24,29-31,34,திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-25,யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26-27; 16: 12-15)
திருப்பலி முன்னுரை
இறை ஆவிக்குரியவர்களே, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, தனது சீடர்களை பலப்படுத்தும் துணையாளராக தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்திருந்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது. தேற்றரவாளரான தூய ஆவியாரின் ஆற்றலால் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தூதர்கள் கிறிஸ்துவின் நற்செதியைத் துணிவுடன் பறைசாற்றி திருச்சபையை நிறுவிய நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். மரணத்தை தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்க மாக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
திருப்பாடல்கள் 104:1,24,29-31,34
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பல்லவி
24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! ப+வுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி
29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். பல்லவி
30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி
31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! பல்லவி
34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
இரண்டாம் வாசகம் தூய ஆவியின் கனிகள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-25சகோதரர் சகோதரிகளே,
நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.
ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26-27; 16: 12-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.
நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.”
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஆவியைப் பொழிபவராம் இறைவா, தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அமைதியின் இறைவா! நீர் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்றது போல, எங்கள் வாழ்விலும் உமது அமைதி நிரம்பப் பெறவும், நாங்கள் என்றும் அமைதியுடன் வாழவும் வேண்டிய வரமருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
தூய் ஆவியை ஏற்படுத்திய இறைவா! தூய ஆவியின் வல்லமையால் நாங்கள் நிரப்பப்பெற்று பாவ வாழ்க்கையை விட்டு, தூய ஆவியின் வழிநடத்துதலால், நல்பாதையில் வழிநடக்க வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
நம்மை உமது சாயலில் படைத்த இறைவா! உடல் ஒன்றே உறுப்புகள் பலவாய் இருப்பது போல தூய ஆவியார் ஒருவரே, திருத்தொண்டுகளும் பலவகையுண்டு ஆனால் ஆண்டவர் ஒருவரே என்று கூறியவரே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மை மட்டுமே பின்பற்ற வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
குழந்தைகளை நேசித்த இறைவா! உலகில் வறுமையால் வாடும் குழந்தைகளைக் கண்ணோக்கிப் பாரும். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து, உம்மைப் பின்பற்றும் குந்தைகளாக வாழ வேண்டிய அன்பினைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
தோழமையின் நாயகனே இறைவா!
எங்கள் வாழ்க்கையில் வெறும் வெளி அடையாளங்களைத் தனித்து ஆடம்பரங்களைக் குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய வரம்தர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
கருணையின் இறைவா! கிறிஸ்துவத்திற்கு எதிராய் உலகெங்கும் செயல்படும், மக்களைக் கண்ணோக்கும். அவர்கள் மனமாறி தங்கள் வன்முறையிலிருந்து விடுபட்டு மனிதநேயமுடன் வாழ வேண்டிய நல்மனதினைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
ஆயனின் கட்டளையை கடைபிடிப்போரிடம் அன்பு நிறைவடைகிறது என உணர்த்தும் ஆயனே! கடுமையான வார்த்தைகளைப் பேசியதால் மனம் புண்ணாகி அவமானமாக இருக்கிறது. பல்வேறு தொல்லைகள் என்னைப் புண்ணாக்கி வேதனையால் நொந்து போகச் செய்துவிட்டது என மனம் வருந்தும் உள்ளத்தினரை அன்பு நிறைந்த வார்த்தையால் அரவணைக்கவும், உமது திருக்காயங்களுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழவும் அருள் பொழிய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|