யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2024-04-25

புனித மாற்கு - நற்செய்தியாளர் விழா




முதல் வாசகம்

என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-14

அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், ``செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.'' ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல் 89: 1-2. 5-6. 15-16

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். 6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

1 கொரி 1:23a,24b
அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். அல்லேலூயா.ர்


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.
ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்'' (யோவான் 3:20-21)

யோவான் நற்செய்தியில் ஆழ்ந்த இறையியல் சிந்தனைகள் உண்டு. குறிப்பாக, இயேசு தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது தமக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற உறவினைப் பல பொருள்செறிந்த உருவகங்கள் வழியாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக இயேசு, ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' என்று தம்மை அடையாளம் காட்டுகிறார் (காண்க: யோவா 14:6). மேலும் இயேசு தம்மை ''ஒளி'' என அழைக்கிறார் (''இயேசு 'உலகின் ஒளி நானே' என்றார்'' - யோவா 8:12). வழி, உண்மை, வாழ்வு, ஒளி என்று பலவிதமாக வருகின்ற இவ்வுருவகங்கள் இயேசுவை நாம் ஓரளவு புரிந்துகொள்ள நமக்குத் துணையாகின்றன. இயேசுவை அணுகிச் செல்வோர் ''ஒளி''யை வெறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்துகின்ற ஒளியாக இவ்வுலகிற்கு வந்தார். அதுபோல, ''உண்மை''யைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்வோர் இயேசுவைப் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசுவே கடவுள் என்றால் யார் என்னும் உண்மையை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, நற்செயல்களும் உண்மையும் நம் வாழ்வில் துலங்கினால் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்கிறோம் எனலாம். அப்போது நம் வாழ்வு ஒளி நிறைந்ததாக இருக்கும். அங்கே இருளுக்கு இடமில்லை. இயேசுவை ஒளியாக நாம் ஏற்கும்போது பாவம் என்னும் இருளை நாம் நம் அகத்திலிருந்து அகற்றிவிடுவோம். இயேசுவின் அருள் என்னும் ஒளி அங்கே பரவி நம் இதயத்தை மிளிரச் செய்யும். இயேசுவின் காலத்தில் ஒருசிலர் அவருடைய போதனையை ஏற்க மறுத்தனர். அவர்கள் உண்மையைக் கண்டுகொள்ள முன்வரவில்லை; ஒளியை அணுகிட முனையவில்லை. இன்று இயேசுவைப் பின்செல்லும் நாம் வாழ்வுக்கு வழிகாட்டும் இயேசுவை ஒளியாகக் கொண்டு அவர் காட்டுகின்ற உண்மையைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அப்போது இயேசு வாக்களிக்கின்ற ''நிலைவாழ்வு'' நமதாகும் (காண்க: யோவா 3:16)

மன்றாட்டு:

இறைவா, ஒளியாக விளங்கும் உம்மை எங்கள் உள்ளத்தில் ஏற்று, இருளகற்றி வாழ்ந்திட அருள்தாரும்.