யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
2024-03-28

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14,திருப்பாடல்கள் 116:12-13, 15-18,கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 11:23-26,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-15)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

திருப்பலி முன்னுரை -1

அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.

இன்று புனித வியாழன். இயேசு பணிக்குருத்துவத்தையும், நற்கருணையையும் ஏற்படுத்திய நாள். பிறர் வாழத் தன்னையே இழப்பதுதான் தெய்வீகம் என்பதை மகத்துவமான திருவருட் சாதனங்கள் வழியாக இயேசு நமக்கு உணர்த்துகிறார். தனது உடலும், இரத்தமும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளக்கப்படும் என்று சொன்னபடியே நிறைவேற்றினார். இதனால் இன்றும் தேவநற்கருணையில் தன்னையே நமக்கெல்லாம் அருள் உயிரூட்டும் உணவாக வழங்கி வருகின்றார். தமது மீட்பின் செயல்களை இன்றும் தம் குருக்கள் வழியாக இயேசு நிறைவேற்றி வருகின்றார். குருத்துவம் இறைவன் நமக்குத் தந்த மகத்துவம். இந்த மாபெரும் கொடைக்காக நன்றி பொங்கும் இதயங்களுடன் இறைவனுக்கு திருப்பலி செலுத்திட இணைவோம்.

திருப்பலி முன்னுரை - 2

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள். இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித வியாழன். இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன். நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை, நமது ஆளுமையை. பணத்தை, செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும், தேவையுள்ளோருக்கு பணிவிடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் இயேசுவிடம் வேண்டி நிற்போம். தொடரும் இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

இது ஆண்டவரின் பாஸ்கா
விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே
திருப்பாடல்கள் 116:12-13, 15-18

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.- பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.- பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.- பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 11:23-26

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள். ஆண்டவரின் அருள்வாக்கு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 13:34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-15

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்.2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில்,3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ' ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார்.7 இயேசு மறுமொழியாக, ' நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார்.8 பேதுரு அவரிடம், ' நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ' நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார்.9 அப்போது சீமோன் பேதுரு, ' அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும் ' என்றார்.10 இயேசு அவரிடம், ' குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார்.11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ' உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார்.12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ' நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?13 நீங்கள் என்னைப் ' போதகர் ' என்றும் ' ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே!

திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும், அவர்கள் ஆற்றும் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடனிருந்து அவர்களை காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

துன்பமில்லாமல் இன்பம் இல்லை சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை உணர்த்திய எம் இயேசுவே!

நாங்கள் ஆன்மீக வாழ்வில் வளம் பெற திருவருட்சாதனங்கள் தனிப்பெரும் கொடைகள் என்பதை உணர்ந்து அவைகளப் போற்றி வாழ்ந்திடவும் அவற்றின் பலன்களை எங்கள் அன்பின் சேவைகள் வழியாக அனைவருக்கும் வழங்கிட அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நான்தான் பெரியவன், தலைவன். என்னை நீங்கள் எல்லோரும் வணங்கி நிற்கவேண்டும், மரியாதை செய்ய வேண்டும்.. என்றெல்லாம் நம்மில் எத்தனை பேர் இறுமாப்புடன் பேசுகிறோம்? நடந்துக்கொள்கிறோம்? நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பார்த்து எங்கள் வாழ்வில் மனமாற்றம் உண்டாக வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

விடுதலையின் தெய்வமே இறைவா!

உமது மக்கள் குருத்துவத்தின் மேன்மையை உணர்ந்து இறை அழைத்தலுக்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணிக்கவும், குருக்களை அன்புடன் இயேசுவின் சீடர்களாக மதித்து வாழ்ந்திட வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கம் காட்டுபவரே இறைவா,

எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வருள வேண்டுமென்றும், சிலுவையில் தம்மையே பலியாக்கிய கிறிஸ்து இயேசுவில் உமது திட்டத்தின் நினைவினைக் கண்டுணர, உலக மக்கள் அனைவருக்கும் ஞானமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''பின்னர் இயேசு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்'' (யோவான் 13:5)

இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்திருக்கிறார். விருந்து அன்பின் அடையாளம். இயேசு தம்மை முழுவதும் மக்களின் நல்வாழ்வுக்குக் கையளிப்பதற்காக வந்தவர். அவர் தம்மையே உணவாக நமக்கு அளிப்பதன் அடையாளம் அவர் தம் சீடர்களோடு அருந்திய விருந்து. அந்நேரத்தில் இயேசு எதிர்பாராத ஒரு செயலைச் செய்கிறார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகிறார். விருந்தினரைத் தம் வீட்டுக்கு அழைப்பவர் அவர்களை நன்கு உபசரித்து அனுப்புவர். விருந்து என்பது அவர்களிடையே நட்பினை ஆழப்படுத்துகின்ற ஒரு தருணம். நம் நடுவே வருகின்ற விருந்தினருக்குக் கைகால் முகம் கழுவுவதற்கு நாம் தண்ணீர் கொடுப்பதுபோல, யூதரிடையே விருந்தினரின் காலடிகளைக் கழுவும் வழக்கம் இருந்தது. அச்செயலைப் பொதுவாக வேலையாட்கள் செய்வார்கள். இயேசுவோ சீடர் நடுவே ''ஆண்டவர்'', ''போதகர்'' என்னும் நிலையில் இருந்தவர் (யோவான் 13:13). ஆனால் அவர் தம்மை ஒரு வேலையாளுக்கு நிகராக மாற்றிக்கொண்டு, தம் சீடருடைய காலடிகளைக் கழுவித் துடைக்கின்றார். இது சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. வழக்கம்போல பேதுரு இயேசுவிடம் அச்செயலுக்கு விளக்கம் கேட்கிறார். இயேசு தரும் பதில் என்ன?

சீடரின் காலடிகளைக் கழுவுகின்ற இயேசு அவர்களை ''இறுதிவரை அன்புசெய்கின்ற'' ஆண்டவர்; அன்பின் முழுமையை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். அந்த அன்புப் பலி கல்வாரியில் போய் முடியும். அதே நேரத்தில் இயேசு தம் சீடரின் காலடிகளைக் கழுவுவதன் வழியாகத் தம் சீடர் எவ்வாறு தம்மைப் பின்பற்றி அவ்வாறு ஒருவர் ஒருவருக்கு ஊழியராக மாற வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பிறருக்குப் பணி செய்வது இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்ததுபோல, அவருடைய சீடர்களும் பணி மனப்பான்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும். சீடர் குழுவாகிய திருச்சபை தன் ஆண்டவராகிய இயேசுவைப் பின்சென்று உலக மக்களுக்குப் பணிபுரிவதில் ஈடுபடவேண்டும். இயேசுவின் பணி அதிகாரம் செலுத்துகின்ற பாணி அல்ல, மாறாக, பிறருடைய நலனை முதன்மைப்படுத்தி அவர்களுக்காகத் தன்னையே பலியாக்குகின்ற பணி. இதுவே திருச்சபையின் பணியாகவும் இருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.