யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
2024-03-10

(இன்றைய வாசகங்கள்: குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 36:14-16,19-23,பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 2:4-10,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 3:14-21)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறையன்பில் இனியோரே, தமது அளவு கடந்த அன்பால் நம்மை மீட்கத் திருவுளம் கொண்ட ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக் காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, கடவுளின் இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவராகிய கடவுள் சினம்கொள்ளத் தயங்குபவர்; அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவோருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவர் என்பதை உணர்வோம். கடவுளின் இரக்கமும் அன்பும், இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயலில் வெளிப்பட்டன. இறைமகனில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

தவறும் மனிதத்தை தேடிய தெய்வீக உள்ளம் உடைய இறைவன், திருந்த மறுக்கும் மக்களை துன்பங்களின் வழியாய் தூய்மைப்படுத்தியதை முதல் வாசகம் எடுத்துரைப்பதை கேட்போம்.
குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 36:14-16,19-23

அந்நாள்களில், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்: அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்: பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். 'நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும் ' என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின்முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: 'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! '

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 137:1-2.3.4-5.6
பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!

பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். (பல்லவி)

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்க ளைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். 'சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். (பல்லவி)

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? எருச லேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! (பல்லவி)

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! (பல்லவி)

இரண்டாம் வாசகம்

குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 2:4-10

சகோதர சகோதரிகளே, ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்காளல் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 3: 16
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 3:14-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமுக்குக் கூறியது: பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை: ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நிலைவாழ்வு தருபவராம் இறைவா,

உம்மில் நம்பிக்கை கொண்டு, உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ உழைத்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவருக்கும் நிலைவாழ்வைப் பரிசளிக்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

எங்களிடம் தான் எத்தனை முகமூடிகள். பொன்னும், பொருளும், உடையும், உறைவிடமும் எங்கள் மதிப்பை உயர்த்துவதாக வீண்பெருமை கொள்ளும் எங்களை மன்னித்தருளும். நாங்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளாக வாழாமல் போலியைத் தேடி தேடி எங்கள் வாழ்வை விரையம் ஆக்காமல் நாள்தோறும் செபித்து உம் வார்த்தைகளைத் தியானித்து உமது மதிப்பீடுகளில் ஊன்றி நிற்கும்போதுதான் நாங்கள் உண்மையாகவே மதிப்பிற்குரியவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தி அருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

தீமையை அழிப்பவராம் இறைவா,

உமது மாட்சியை களங்கப்படுத்தும் விதமாக உலக மக்களிடையே காணப்படும் சிலை வழிபாட்டு கோயில்கள் அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வை வழங்கும் தந்தையே இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சினம் கொள்பவராம் இறைவா,

உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகியவற்றுக்கு காரணமானவர்கள் மீது உமது சினத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை அரவணைக்கும் எம் இறைவா!

உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கம் காட்டுபவராம் இறைவா,

இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும், பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்'' (யோவான் 3:14)

''திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா'' இன்று கொண்டாடப்படுகிறது. சிலுவையில் இயேசு அறையப்பட்டு ''உயர்த்தப்பட்டார்''. அதாவது, சிலுவையில் தொங்கிய இயேசுவைக் கடவுள் மகிமைப்படுத்தினார். சிலுவை என்பது துன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஓர் முரண்பாட்டு அனுபவம். இயேசுவின் துன்பமே நம் மகிழ்ச்சிக்கு வழியாயிற்று. ஏனென்றால் துன்புற்று இறந்த இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோருக்குக் கடவுள் என்றும் நீடிக்கின்ற ''நிலைவாழ்வை'', ''நிறைவாழ்வை'' வாக்களித்துள்ளார். இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் பயணம் சென்ற போது பாம்புக் கடிக்குப் பலர் பலியாயினர். அப்போது மேலே உயர்த்தப்பட்ட பாம்பினை ஏறெடுத்துப் பார்த்தவர்கள் பிழைத்துக்கொண்டனர் (காண்க: எண்ணிக்கை 21:4-9). அந்நிகழ்ச்சி இயேசு சிலுவையில் தொங்கி நமக்கு வாழ்வளித்ததற்கு ஓர் முன்னடையாளம் போலாயிற்று.

சிலுவையைக் கண்டு அஞ்சுவோர் இன்றும் உண்டு. துன்பம் தமக்கு நேர்ந்துவிடலாகாது என்னும் எண்ணமே இதற்குக் காரணம். ஆனால் துன்பத்தின் வழியாகத்தான் கடவுள் நம்மை நிலைவாழ்வில் கொண்டுசேர்க்கின்றார் என்பதே உண்மை. துன்பத்தை நாம் நாடிச் செல்லவேண்டியதில்லை. ஆனால் வருகின்ற துன்பங்களைக் கடவுளின் திருவுளத்துக்கு ஏற்ப நாம் ஏற்றுக்கொண்டு, அத்துன்பங்களை இயேசுவின் துன்பங்களோடு இணைத்து மனதார உள்வாங்கிச் செயல்பட்டால் நாமும் இயேசுவின் மீட்புப் பணியில் நெருங்கிப் பங்கேற்போர் ஆவோம். அப்போது இயேசு மாட்சிமையில் ''உயர்த்தப்பட்டது'' போல நாமும் அவருடைய மாட்சியில் பங்கேற்று மகிழ்வோம். இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் எதைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை. ஏனென்றால் தீய சக்திகள் அனைத்தையும் அவர் அடிபணியச் செய்துவிட்டார். அவருடைய வாழ்வு தோல்வியில் முடிந்ததுபோலத் தோன்றினாலும் உண்மையில் வெற்றி வாகை சூடியவர் அவரே. அந்த இயேசுவின் வெற்றியில் நமக்கும் பங்குண்டு.

மன்றாட்டு:

இறைவா, உயர்நிலையை அடைய வேண்டும் என்றால் நாங்களும் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.