இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-03-03
(இன்றைய வாசகங்கள்:
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 20:1-17,பதிலுரைப்பாடல் திபா. 19:7-10,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிரந்து வாசகம். 1:22-25,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25)
திருப்பலி முன்னுரை
அன்பு இறைமக்களே, நம்மைப் படைத்து, நமது வாழ்க்கை நெறிகளை வகுத்தளித்த அன்புநிறை இறைவன் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம். தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் சிறப்பிக்கும் திருவழிபாடு, இறைப்பற்றுடன் பிறரை அன்புசெய்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப் பிடித்து வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், அவரது திருவுளத்திற்கு ஏற்றவாறு நடக்கவும், பாவச் சூழ்நிலைகளை விட்டு விலகவும் வேண்டும் என்பதை உணர்வோம். இயேசுவைப் போன்று சமூக அநீதிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றவர்களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப் பெற்றது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 20:1-17
மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.
உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
பதிலுரைப்பாடல் திபா. 19:7-10
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி:
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி:
ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி:
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை: தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. பல்லவி:
இரண்டாம் வாசகம் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்: அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின் ஞானம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிரந்து வாசகம். 1:22-25சகோதர சகோதரிகளே, யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்: கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது: மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! (யோவா. 3:16) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25
அக்காலத்தில், யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்: கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்: அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்: ஆடு மாடுகளையும் விரட்டினார்: நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்: என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். 'உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், 'இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ; என்றார். அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை: ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சட்டத்தின் நிறைவாம் இறைவா, மோசே வழியாக நீர் வழங்கிய பத்து கட்டளைகளும் திருச்சபையோரின் வாழ்க்கை நெறிகளாக தொடர்ந்திட உழைக்கும் ஆற்றலை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நீதியை நிலைநாட்டும் இறைவா, உலக நாடுகளில் நிலவும் அநீதியான சட்டங்களும், அடக்குமுறைகளும் மறையவும், உமது கட்டளைகளுக்கு ஏற்ப உலகில் இறையன்பும், பிறரன்பும் செழிக்கவும் மக்களிடம் நல்லதோர் மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வல்லமை மிகுந்தவராம் இறைவா, தாங்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற ஆணவத்தில் மிதக்கின்ற எங்கள் நாட்டின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் உமது வல்லமையை உணர்ந்து, உமக்கும் மக்களுக்கும் பணி செய்பவர்களாய் மாற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வாழ்வை வழங்கும் தந்தையே இறைவா! இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எம்மை அரவணைக்கும் எம் இறைவா! உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அனைவரையும் சாவினின்று காக்கும் தந்தையே இறைவா!
உலகில் இன்று வேகமாகப் பரவி வரும் எல்லாவிதமான கொடிய நோயிலிருந்தும் அனைவரையும் காத்து, நல்ல உடல் நலத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞானத்தின் உற்றாம் இறைவா, இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும், பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|