இரண்டாவது திருவழிபாடு ஆண்டு திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி 2024-02-16
முதல் வாசகம்
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9
இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு. அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள். `நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?' என்கின்றார்கள்.
நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது. ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?
கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் `இதோ! நான்' என மறுமொழி தருவார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 16-17
1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ய உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி
16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, ``நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
அவர்களும் நோன்பு இருப்பார்கள் !
தமது சீடர்கள் நோன்பிருக்காததை நியாயப்படுத்திப் பேசிய இயேசு, கடைசியாகச் சொன்ன சொற்கள்: “அவர்களும் நோன்பு இருப்பார்கள் ” என்பதுதான். எனவே, நாமும் நோன்பிருக்க வேண்டும். தவக்காலத் திருப்பலியின் நான்காம் தொடக்கவுரை இறைவனுக்கு இவ்வாறு நன்றி சொல்கிறது: “எங்கள் ஒறுத்தல் முயற்சியால் மனத்தை மேலே எழுப்புகின்றீர். ஆணவத்தை அடக்குகின்றீர். நற்பலன்களையும், அதன் பரிசான நல்வாழ்வையும், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக வழங்குகின்றீர்”. ஆம், நோன்பு இருப்பதால், பல நன்மைகள் நிகழ்கின்றன. அவற்றில் மூன்றைச் சொல்லி, நன்றி சொல்கிறது இத்திருப்பலிச் செபம். நோன்பிருப்பதால் நமது ஆணவம் அடங்குகிறது. மனம் இறைவனை நோக்கி எழும்புகிறது. இறைவனும் நமது நோன்பை, இழப்பை ஏற்று, நற்பலனைப் பரிசாகத் தருகின்றார் என்பதுதான் நமது நம்பிக்கை, இறையியல். எனவே, நாமும் நோன்பிருப்போம். நல்வாழ்வில் வளர்வோம்.
மன்றாட்டு:
அன்பின் தெய்வமே இறைவா, அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று சொல்லி, எங்களை நோன்பிருக்க அழைப்பதற்காக உமக்கு நன்றி. நாங்கள் தாராள மனத்துடன் நோன்பை மேற்கொள்ள அருள்தாரும். எங்கள் நோன்பு உமக்கு ஏற்றதாக அமைவதாக. உமக்கு மாட்சி அளிப்பதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|