இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-02-11
(இன்றைய வாசகங்கள்:
லேவியர் நூலிலிருந்து வாசகம். 13:1-2, 44-46,பதிலுரைப்பாடல் 32:1,2, 5,11,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 – 11:1,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45)
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க அழைப்பு விடுக்கிறது. 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்ற தாழ்ச்சி யுள்ள வேண்டுதலை ஆண்டவர் முன் சமர்ப்பிக்க இன்று நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம்மீது கருணை கூர்ந்து, நமக்கு நிறைவான நலன்களைக் கட்டளையிடுவார். நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள், இடையூறுகளில் கடவுளின் அருட்கரம் நம்மை வழிநடத்த வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
லேவியர் நூலிலிருந்து வாசகம். 13:1-2, 44-46
அந்நாள்களில், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது:"ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்." எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே நீரே எனக்குப் புகலிடம்.
பதிலுரைப்பாடல் 32:1,2, 5,11
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி:
'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்: என் தீச்செயலை நான் மறைத்ததில்லை: ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி:
நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்: நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி:
இரண்டாம் வாசகம் நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 – 11:1சகோதர சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, " நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் " என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! " என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் " என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மன்னிப்பு அளிப்பவராம் இறைவா, திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த வழியில் வாழ்ந்து, இறைமக்கள் அனைவரையும் பாவம் என்ற தொற்றுநோயிலிருந்து விடுவித்து வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மனமாற்றம் அளிப்பவராம் இறைவா, உலகெங்கும் தொற்றுநோயாக பரவி இருக்கும் தீவிரவாதம், மதவாதம், வன்முறை, லஞ்சம், ஊழல், அடக்குமுறை போன்றவை, உமது அருளால் அழிந்து ஒழிய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நலன்கள் அளிப்பவராம் இறைவா, எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், தீய வழிகளில் புகழ் அடைவதையும், அடக்குமுறைகளால் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டுவதையும் விரும்பாமல், மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாய் வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நல்வாழ்வு அளிப்பவராம் இறைவா, நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், வேலையின்மை, குழந்தை யின்மை, உணவின்மை, தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வருந்தும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு முழுமையாக நலம் அளித்து உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா! நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும், அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
கருணையின் உருவே இறைவா!
நாங்கள் ஏழை எளிய மக்கள் மேல் அன்பு கொண்டு வாழவும், அவர்களின் தேவைகளில் உடனிருக்கவும், பிறரின் துன்பங்களைத் தன் துன்பங்கள் போல் ஏற்று வாழவும் வரமருள வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
துன்பத்தில் ஆறுதல் தரும் இறைவா! நோயினால் அவதிப்படுகின்ற உம் மக்களைக் கண்ணோக்கிப்பாரும். நீர் அவர்களின் துன்பத்தில் ஆறுதலாக இருந்து, நோயிலிருந்து விடுதலை கொடுக்கவும் வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
பரிவின் தொடுதல் !
தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.
இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.
மன்றாட்டு:
எங்கள் வாழ்வைத் தொட்டு நலம் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியைப் பின்பற்றி நாங்களும் ஒருவர் ஒருவரை அன்புடன் தொட்டு நலப்படுத்தவும், தீமை தரும் தொடுதல்களைத் தவிர்க்கவும், தொடுவதன் மூலம் தடைகளை உடைக்கவும் அருளைத் தாரும். ஆமென்.
|