யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2024-02-03




முதல் வாசகம்

“உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்” எனச் சாலமோன் செபித்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13

அந்நாள்களில் சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார். சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
திருப்பாடல்: 119: 9. 10. 11. 12. 13. 14

9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ? 10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். -பல்லவி

11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். 12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். -பல்லவி

13 உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன். 14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக்கா 2:32)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக் 2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு அவரிடமிருந்து வருகின்ற ''ஒளி'' பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார் (யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது. வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள் உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில் உணரலாம்.

இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம் வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும். பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும். இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின் வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக வாழ்விலும் அனுபவித்து அறிவர்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.