இரண்டாவது திருவழிபாடு ஆண்டு கிறீஸ்துபிறப்புக்காலம் 2024-01-06
முதல் வாசகம்
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13
அன்பார்ந்தவர்களே,
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.
கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.
இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி
14
அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி
19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11
அக்காலத்தில்
யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார்.
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார்.
இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்.
இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வை யாளரிடம் கொண்டுபோங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
அன்னை மரியாவின் இட ஒதுக்கீடு !
அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தாரகை என்று வர்ணித்தால் அது மிகையல்ல. ஒடுக்கப்பட்டோருக்கும், ஓரங்கட்டப்பட்டோருக்கும் சார்பாக வாதிட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உயரிய பங்கைப் பெற்றுத் தந்தார் அன்னை மரியா. திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும்தான் அமர்வர். அவர்களுக்கெல்லாம் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், திருமண வீட்டாரால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படாதோர் முதலியோரே அமர்ந்திருப்பர். இவர்களுக்குத்தான் இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தி தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார். எனவே, ஒதுக்கப்பட்ட கடைசிப் பந்தில் அமர்ந்திருந்தவர்கள் முதல் பந்திகளில் அமர்ந்து இரசம் குடித்த செல்வாக்கு மிக்கோரைவிட அதிக சுவை நிறைந்த, நல்ல இரசத்தை அவர்கள் மனம் நிரம்பும்வரை அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, ஒதுக்கப்பட்டோருக்கு அதிக தரமும், அளவும் மிக்க திராட்சை இரசம் கிடைத்தது. எனவே, அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டின் தாய் என்று பெருமையுடன் அழைக்கலாம்.
மன்றாட்டு:
வானகத் தந்தையே இறைவா,
உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். அன்னை மரியாவை எங்கள் அனைவருக்கும் தாயாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். அந்த அன்னையைப் பின் பற்றி நாங்களும் ஏழை, எளியோர், ஓரங்கட்டப்பட்டோர்மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய தரமும், அளவும் மிக்க ஒதுக்கீட்டைப் பெற உழைப்போமாக! ஆமென்.
|