இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-01-01
(இன்றைய வாசகங்கள்:
எண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27,பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! ,திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7,புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 2:16-21)
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவிலும் அவரைப் பெற்றுத்தந்த மரியிலும் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் மரியாள் இறைவனின் அன்னை திருவிழா, புத்தாண்டு விழா நல்வாழ்த்துக்கள்.
புதிய ஆண்டின் முதல் நாளில் மரியாள் இறைவனின் அன்னை என்ற பெருவிழாவை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். “ ஒரு மனிதன் தன் வாழ்வில் முதுமை அடைய அடைய தாயின் தேவையை அதிகமாக உணர்கின்றான்” என்று பிரஞ்சு எழுத்தாளர் பிரான்கோய்ஸ் மவுரியாக் (Francois Mauriac ) குறிப்பிடுகிறார். இன்றுள்ள நுகர்வுக் கலாச்சார உலகில், பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் சக மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் மானுட சமூகத்திற்கு ஒரு தாயின் அரவணைப்பு மிக மிகத் தேவையாயிருக்கின்றது. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் மனிதன் சந்திக்கும் தனிமை, தோல்வி, விரக்தி, இவற்றின் மத்தியில் ஒரு தாயின் உணர்வுப் பூர்வமான தொடுதல், தழுவல், அன்பு, அடைக்கலம் அனைத்தும் மிக இன்றியமையாத ஒன்றாக அமைகின்றது. ஒரு மனிதனின் இயல்பான இந்தத் தேவையைக் கத்தோலிக்கத் திருச்சபை மரியன்னை வழியாக தனது பிள்ளைகளுக்கு நிறைவேற்றி வைக்கின்றது. இயேசு இந்த உலகைவிட்டு விடைபெறும் முன் மானுட சமூகத்திற்கு தனது தாயை கொடையாக கொடுக்கிறார் . இந்தத் தாய் இயேசுவின் வாழ்வு முழுவதும் அவரோடு உடன்பயணித்தவர். அவரின் இன்ப துன்ப நிகழ்வுகளில் உடனிருந்தவர். சிறுவயதில் மட்டுமல்ல அவரது பணிவாழ்விலும் அவருடைய உணர்வுகளைப் புரிந்து நடந்தவர். புனிதர்களும், திருஅவைத் தந்தையர்களும் இந்தத் தாயின் அன்பை அளவுக்கதிகமாகத் தங்கள் வாழ்வில் உணர்ந்ததாகப் பதிவு செய்திருக்கின்றனர். நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் மரியாள் உங்களுக்கு யார்? என்ற கேள்வியை எழுப்பிய போது அன்னை மரியாள் எனது அம்மா என்று பாசத்தோடு பகிர்ந்துள்ளார். மேலும் நாம் உறவு கொள்ள வேண்டிய இரண்டு தாய்மார்களைப் பற்றி எடுத்துரைக்கிறார். அதாவது ஒவ்வொரு கிறித்தவனுக்கும் அன்னை மரியாளும், திருச்சபையும் இரண்டு தாய்மார்களாக உள்ளனர் என்றும் இவர்கள் இருவரையும் தாயாகப் பெறாதவர்கள் அனாதைகள் என்றும் குறிப்பிடுகிறார். பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் மரியின் பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் மரியன்னையின் பாசமிகு அன்பில் நம்மைக் கையளிப்போம். நமது அன்பில் குறைவாயிருப்பதை அவரது அன்பு நிறைவுசெய்யும். அந்த அன்னையின் முன்மாதிரியைப் பின்பற்றி பாசமிகு தாய்மார்களாக நம் குடும்பத்தில் உலா வருவோம். நமது அன்பான தொடுதலால், தழுவுதலால், கனிவான பார்வையால், நம்பிக்கை தரும், ஆறுதல் அளிக்கும் சொற்களால் தாய்மை உணர்வை எல்லாருக்கும் வெளிப்படுத்துவோம். தொடரும் திருப்பலியில் வரம்வேண்டி உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
எண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! "இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 67;1-2,,4-5.7
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி
4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி
5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி
இரண்டாம் வாசகம் கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி "அப்பா, தந்தையே" எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 2:16-21
அக்காலத்தில் இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
புதுமையின் பிறப்பிடமே எம் இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் அனைவரும் உம் மந்தைகளாகிய எங்களை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
தாயும் தந்தையுமான இறைவா! இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நலம் அருளும் நல்ல ஆயனே இறைவா! உடல்நலக் குறைவினால் மருத்துவமனையிலும், தங்கள் இல்லங்களிலும் இருந்து சிகிச்சை பெறும் ஓவ்வொரு நல்ல உள்ளங்களுக்காவும் உம்மிடம் மன்றாடுகிறோம். உமது அன்புக் கரங்களால் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு குணப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பே உருவான இறைவா! கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
அன்னையின் ஆசியோடு!
இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!
இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன? குறி;ப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.
இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.
மன்றாட்டு:
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
|