யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 6ஆம் நாள் 1வது வாரம் சனிக்கிழமை
2023-12-30
முதல் வாசகம்

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-17

என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டுள்ளன. எனவே உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன். சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்; இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை. உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்துபோகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
திருப்பாடல் 96: 7-8a. 8b-9. 10

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8a ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி

8b உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில், உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, 'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்'' (லூக்கா 2:28,31)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதையும் இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிறகு (லூக் 2:21) லூக்கா இயேசுவின் அர்ப்பணம் பற்றிப் பேசுகிறார். திருச்சட்ட மரபினை யோசேப்பும் மரியாவும் கடைப்பிடித்தார்கள். எனவே, ஆண்மகவு பிறந்ததும் அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க எருசலேம் கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இறைப்பற்றுக் கொண்டு நேர்மையாக வாழ்ந்துவந்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் சிமியோன். கோவிலில் வயது முதிர்ந்த அன்னா என்னும் இறைவாக்கினரும் இருந்தார். இந்த இருவரையும் யூத சமய மரபின் உருவகங்களாக நாம் காணலாம். அதாவது, இஸ்ரயேலர் கடவுளின் வாக்குறுதி ஒருநாள் நிறைவேறும் என்றும், மெசியா மக்களிடையே வருவார் என்றும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். சிமியோனும் அன்னாவும் அந்த மரபின் வழி வந்தவர்கள். மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள். அவர்கள் இயேசு குழந்தையைக் கண்டதும் அவரே மெசியா என்பதை அறிந்துகொள்கிறார்கள். சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார்; கடவுளைப் போற்றுகிறார்; தம் குரலை எழுப்பி, இயேசு ''பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக் 2:32) என அறிக்கையிடுகிறார்.

இயேசுவின் வருகை சிமியோனின் வாழ்விலும் அன்னாவின் வாழ்விலும் நிறைவு கொணர்ந்தது. கடவுள் தம் மக்களைத் தேடி வருகிறார் என்பதை சிமியோனும் அன்னாவும் உணர்ந்திருந்தார்கள். இயேசுவின் வழியாகக் கடவுளின் திட்டம் நிறைவேறுகிறது என்பதையும் அவர்கள் அறிந்தார்கள். கடவுளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஒரு நாளும் ஏமாற்றமடையார் என்பதை இங்கே காண்கிறோம். நம் வாழ்வில் கடவுள் புகுந்திட நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற இயேசு கிறிஸ்து நம் இதயத்தையும் வாழ்வையும் ஒளிர்விப்பார் என நாம் உறுதியாக நம்ப வேண்டும். அப்போது நம் வாழ்வில் நிலவுகின்ற இருள் மறைந்துவிடும்; நாமும் கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்படுவோம். ஒளிபடைத்த கண்களோடு நாம் கடவுளின் திருவுளத்தைக் கண்டு, அதை நம் வாழ்வில் செயல்படுத்த முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் அக இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற உம்மை மனமுவந்து நாங்கள் ஏற்றிட அருள்தாரும்.