யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
கிறிஸ்துபிறப்புக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2023-12-27

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா




முதல் வாசகம்

நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த `நிலைவாழ்வு' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
திருப்பாடல் 97: 1-2. 5-6. 11-12

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8)

இயேசுவின் சாவு அவர்தம் சீடர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. அவர்களுடைய கனவுக்கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சுக்கு நூறாயின. இயேசு மிகுந்த அதிகாரத்தோடும் வல்லமையோடும் எதிரிகளை முறியடித்து, கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் ஏற்படுத்துவார் என்றும் அந்த ஆட்சியில் தங்களுக்கு முக்கிய பதவிகள் தரப்படும் என்றும் அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதால் அவர்கள் உள்ளம் உடைந்த நிலையில் நம்பிக்கை இழந்தவர்களாய் இருந்தார்கள். மண்ணுலக மெசியாவை எதிர்பார்த்த சீடர்கள் இயேசுவின் உண்மையான மெசியாப் பண்பை உணர்ந்து ஏற்றிட நாள் பிடித்தது. இயேசு இவ்வுலக மன்னர்களைப் போல, ஆட்சியாளர்களைப் போல ஓர் அரசையோ ஆட்சியையோ நிறுவுவதற்கு மாறாக, கடவுளின் ஆட்சிக்குப் புதியதொரு பொருள் கொடுத்ததை அவர்கள் படிப்படியாகத்தான் உணர்ந்து ஏற்றனர். சிலுவையில் இறந்து கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு கடவுளின் ஆட்சியைப் புதியதொரு முறையில் நிலை நாட்டினார்.

இயேசு சாவின் ஆட்சியை முறியடிக்கிறார். சாவு அவருடைய வாழ்வுக்கு முற்றுப் புள்ளியல்ல, மாறாக, அவருடைய புதிய வாழ்வுக்கு ஒரு தொடக்கம். இதை நாம் உளமார ஏற்று உள்வாங்குவதையே ''நம்பிக்கை'' என அழைக்கிறோம். மகதலா மரியா சீமோனையும் ''மற்றச் சீடரையும்'' அணுகி, கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும் ''மற்றச் சீடர்'' ஒடோடிச் சென்று ''கல்லறையின் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8). இங்குக் குறிக்கப்படுகின்ற ''மற்றச் சீடர்'' யார்? ''இயேசு தனி அன்பு கொண்டிருந்த'' இச்சீடர் யோவான் ஆவார் என்பது மரபுச் செய்தி (காண்க: யோவா 20:2). ஆயினும் நாம் ஒவ்வொருவரும் அந்த ''மற்றச் சீடரின்'' இடத்தில் நம்மை நிறுத்திப் பார்க்கலாம். அப்போது நாமும் நமக்காக வாழ்ந்து இறந்த இயேசு சாவின் ஆட்சியை முறியடித்துவிட்டார் என்பதைக் கல்லறையின் ''உள்ளே சென்று'', ''கண்டு'' ''நம்புவோம்''. இந்த நம்பிக்கை நம்மில் வளரும்போது நாம் இறையாட்சியின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவோம்.

மன்றாட்டு:

இறைவா, வாழ்வின் ஊற்று நீரே என நாங்கள் ஏற்றிட அருள்தாரும்.