யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2023-12-25

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52:7-10,உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-18)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

"யார் வெச்சது?

யார் வெச்சது?

உன் சட்டமடா!

இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா!"...

என்ற பாடல் வரிகள் இன்றையச் சூழலில் திரும்பும் திசை எங்கும் ஒலிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆம்! திரும்பும் திசை எங்கும் பலவிதமான போராட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. மக்களின் மனங்களில் அச்ச உணர்வானது குடிகொண்டிருக்கிறது. ஆனால் இத்தகைய சூழ்நிலையில் நாம் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட இங்கு கூடியிருக்கிறோம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி விட்டுச் செல்வதற்கு கிறிஸ்து பிறப்பு விழா என்பது ஒரு வாடிக்கையான நிகழ்வு மட்டுமல்ல. இது பல அர்த்தங்கள் கொண்ட ஒரு விழாவாகும். கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான பாடங்களை நமக்குக் கற்பிக்கிறது. இயேசு இந்த மண்ணகத்தில் பிறந்த நேரத்தை நாம் நினைவு கூறும்போது இன்று நிலவக்கூடிய அதே நிகழ்வுகள் தான் அன்றும் அரங்கேறிக் கொண்டிருந்தன. இயேசு இந்த மண்ணில் பிறந்த போது சட்டங்களால் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களே மக்களை நெரிக்கக்கூடிய சட்டங்களாக மாறின. மனிதர்களிடையே ஒரு அச்ச உணர்வு ஆழமாக குடிகொண்டிருந்தது. பாவத்தில் பலரும் உழன்று கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில் அவர்களை அச்சூழலில் இருந்து மீட்டெடுக்கவே இறைமகன் இயேசு இம்மண்ணில் அன்று அவதரித்தார். இன்று அதே இறைமகன் இயேசு இம்மண்ணில் அவதரிக்க இருக்கிறார். இன்றும் நாம் திரும்பும் திசை எங்கும் போராட்டங்கள். சட்டங்களால் மக்கள் தங்கள் உரிமைகளைக் கூட பெற முடியாத அளவிற்கு ஒடுக்கப்பட கூடிய சூழ்நிலை. கொடிய நோய் தொற்று காரணமாக, அருகில் உள்ளவர்களை கூட அரவணைக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அன்பு, பிறரன்பு, பொதுசேவை, என்பதெல்லாம் அச்ச உணர்வால் இன்று மழுங்கடிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையில் இறைவன் இயேசு கிறிஸ்து அஞ்சாதீர்கள்! நான் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்ற வார்த்தைகளின் வடிவில் நம் உள்ளங்களில் பிறக்க வரவிருக்கிறார். பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு நம்மிடையே இருக்கக்கூடிய அச்ச உணர்வுகளை எல்லாம் கடந்து, இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்பித்த இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம். இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது நமக்கு ஒரு நம்பிக்கையின் ஒளிச் சுடராக இருக்கிறது. இயேசுவின் பிறப்பை நமது உள்ளங்களில் நம்பிக்கையின் தீபமாகப் பிறக்க வைக்க அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருப்பலியில் அச்சம் தவிர்த்து, கலக்கம் தவிர்த்து, உறுதியான, அசைக்க முடியாத ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவை நமது உள்ளங்களில் பிறக்கச் செய்ய அனைவரும் இணைந்து இறைவனின் திருப்பலியில் பங்கேற்போம்.இறை ஆசீர் பெறுவோம்.



முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52:7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார் " என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர்கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 98: 1. 2-3a. 3cd-4. 5-6
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் " என்றும், "நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார் " என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக " என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது:வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.அனைத்தும் அவரால் உண்டாயின: உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.அவரிடம் வாழ்வு இருந்தது: அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது: இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான்.அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.+அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அன்புத்தந்தையே இறைவா!

உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் அனைவரையும் உம்பாதம் அர்பணிக்கிறோம். உம் பணியை தங்கள் வாழ்வாக்கி, இறைமக்களை அன்பின் சமூகமாக கட்டியெழுப்பவும், உம் அன்புக் கட்டளைகளை தங்கள் வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான இறைவா!

இன்று உம்மை தேடி வந்திருக்கும் எம் மக்களை நிறைவாக ஆசீர்வதியும். எவ்வாறு எம் அன்னையாம் கன்னிமரியாள் உம்மோடு ஒன்றித்து, உம் திருவுளத்தை நிறைவேற்றினாரோ, அதேபோன்று எம்மக்களும் ஒற்றுமையிலும், சமாதானத்திலும் ஒன்றித்திருந்து உம் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) ஞானத்தின் ஊற்றே இறைவா!

சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள என்றவரே, எம்கிராமத்தில் உள்ள சிறுகுழந்தைகள் அனைவரும் ஞானத்திலும், அன்பிலும், ஒழுக்கத்திலும் வளர்ச்சி பெற்று விளங்கவும், என்றும் உம் அன்பு பிள்ளைகளாக வளரவும் உம் வல்லமையை இவர்கள் மேல் பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலம் அருளும் நல்ல ஆயனே இறைவா!

உடல்நலக் குறைவினால் மருத்துவமனையிலும், தங்கள் இல்லங்களிலும் இருந்து சிகிச்சை பெறும் ஓவ்வொரு நல்ல உள்ளங்களுக்காவும் உம்மிடம் மன்றாடுகிறோம். உமது அன்புக் கரங்களால் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு குணப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)

கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது.

கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.