யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
திருவருகைக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2023-12-23




முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6

படைகளின் ஆண்டவர் கூறியது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக்காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும். இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
திருப்பாடல் 25: 4-5ab. 8-9. 10,14

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; - பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக் குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக்கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவரு டைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்...செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார்'' (லூக்கா 1:57,63)

செக்கரியா, எலிசபெத்து என்னும் தம்பதியர் ''வயது முதிர்ந்தவர்கள்'' (லூக் 1:18). ஆனால் அவர்களுக்கு மகப் பேறு இல்லை. இருவருமே குரு குல வரிசையில் வந்தவர்கள். செக்கரியா திருக்கோவிலில் குருத்துவப் பணி ஆற்றி, தூபம் காட்டுகிற வேளையில் அவருக்குக் கடவுளிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. வயது முதிர்ந்த அத்தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதே அச்செய்தி. அதை கபிரியேல் வானதூதர் செக்கரியாவுக்கு அறிவிக்கிறார். செக்கரியாவுக்கோ பெரும் அதிர்ச்சி. கடவுளிடமிருந்து வந்த செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. அப்போது வானதூதர் ''நான் கூறிய வார்த்தைகள் நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'' (காண்க: லூக் 1:20) என்கிறார். பேறு காலம் வந்ததும் எலிசபெத்து ஓர் ஆண்மகவை ஈன்றெடுக்கிறார். இவ்வரலாறு விவிலியத்தில் வருகின்ற பிற அதிசயப் பிறப்பு வரலாறுகளை ஒத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வயதில் முதிர்ந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்ததைக் குறிப்பிடலாம் (தொநூ 18:1-15). அதுபோல, மனோவாகு என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிம்சோன் பிறந்ததும் (1 நீத 13:2-25), எல்கானா என்பவருக்கும் அவருடைய மனைவி அன்னாவுக்கும் சாமுவேல் பிறந்ததும் (1 சாமு 1-23) முதிர்ந்த வயதில் நிகழ்ந்தவையே. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்னும் உண்மையை இந்த நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. யோவான் பிறந்த செய்தி அவருடைய பெற்றோருக்கும் உற்றார் உறவினர்க்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்ந்தது (லூக் 1:58).

பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. யூத வழக்கப்படி, குழந்தைக்கு இடப்படுகின்ற பெயர் அக்குழந்தையின் குடும்பப் பின்னணியோடு அல்லது அக்குழந்தையின் சிறப்பியல்புகளோடு ஏதாவது ஒருவிதத்தில் தொடர்புடைய ஒரு கருத்தைத் தெரிவிப்பது உண்டு. குழந்தைக்கு அதன் பாட்டனார் பெயரை இடுவது வழக்கம் (காண்க: லூக் 1:61). மேலும், இடப்படுகின்ற பெயர் அப்பெயருடையவரின் ஆளுமையை வரையறுப்பதாகவும் கருதப்பட்டது. யோவான் என்னும் பெயர் ''ஆண்டவர் பெரிதும் இரக்கம் காட்டினார்'' எனப் பொருள்படும் (காண்க: லூக் 1:58). எனவேதான் இப்பெயரைத் தமிழில் ''அருளப்பன்'' என்று பெயர்த்தார்கள். இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடு எனலாம். ''இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என நாம் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பின்போதும் வியந்து கூறலாம் (காண்க: லூக் 1:66). ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சாயலாகவே இவ்வுலகில் வருகிறது. அச்சாயல் நாள்தோறும் தெளிவாகத் துலங்கிட வேண்டும் என்றால் நாம் கடவுளிடம் துலங்குகின்ற அன்பு, இரக்கம் என்னும் பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது நாமும் கடவுளின் அருள் பெற்றவர்களாக வாழ்வோம், பிறரும் அந்த அருளை அனுபவிக்க வழியாவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள் பெருக்கால் எங்களை நிறைவுசெய்யும் நற்செயலுக்கு நன்றி!