திருவழிபாடு ஆண்டு - B திருவருகைக்காலம் 3வது வாரம் ஞாயிற்றுக்கிழமை 2023-12-17
முதல் வாசகம்
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2ய, 10-11
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார்.
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.
லூக் 1: 47-48. 49-50. 53-54
47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி
53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி
இரண்டாம் வாசகம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாராக! திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24சகோதரர் சகோதரிகளே,
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.
அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்
எசா 61: 1ac
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8,19-28
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்றார்.
பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''யோவான், 'நான் திருமுழுக்குக் கொடுக்கிறேன்.
நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' என்றார்'' (யோவான் 1:26)
யோர்தான் ஆற்றருகே யோவான் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய குரல் கணீரென ஒலிக்கிறது. மக்கள் மனம் மாறி, கடவுளிடம் திரும்பாவிட்டால் அவர்களுக்கு அழிவு வந்தே தீரும் என அச்சுறுத்தும் மொழியில் பறைசாற்றுகிறார் யோவான். மக்கள் கடவுளோடு நல்லுறவு கொண்டாட வேண்டும் என்றால் அவர்கள் தம் பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு நன்னெறியில் வழிநடக்க வேண்டும். இதற்கு அடையாளமாகத்தான் திருமுழுக்கு அமைகின்றது. யோவான் வழங்கிய திருமுழுக்கு யூத மரபில் முற்றிலும் புதிது என்று சொல்ல முடியாது. எஸ்ஸேன் என்னும் துறவியர் குழுவில் திருமுழுக்கு வழக்கம் இருந்தது. மேலும், நீரைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தும் சடங்குகளும் யூதரிடையே நிலவின. ஆயினும், யோவான் அறிவித்த திருமுழுக்கில் சில தனித்தன்மைகள் உள்ளன. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையைத் துறக்கவேண்டும் எனவும் மனம் மாறிக் கடவுளிடம் செல்லவேண்டும் என்றும் கேட்ட யோவான் தம்மைவிடவும் பெரியவர் ஒருவர் வருகிறார் எனவும் அறிவித்தார். ''நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்'' என்று யோவான் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்.
இயேசுவைப் பலர் பார்த்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறியவில்லை. திருமுழுக்குப் பெற்ற பிறகுதான் இயேசு தம் பொதுப் பணியைத் தொடங்கினார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இன்று நம் நடுவே இயேசு இருக்கிறார் என நாம் நம்புகிறோம். ஆனால் அவரை நாம் உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமே. விவிலியத்தில் ''அறிதல்'' என்னும் சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. ஏதோ மேல்மட்டமாக ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்வது உண்மையான ''அறிவு'' அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் புரகின்ற செயல்கள் மேலோட்டமான நிலையில் நின்றுவிடுகின்றன. ஆனால் இயேசுவை ''அறிதல்'' என்பது அவருடைய உண்மையான இயல்பை ஆழப் புரிந்துகொண்டு, அவரை நம் உள்ளத்தில் வரவேற்பதைக் குறிக்கும். இந்த அறிவு வெறும் புலனளவிலோ சிந்தனையளவிலோ நின்றுவிடாது. மாறாக, புலனும் சிந்தையும் காட்டுகின்ற இயேசுவை நம் இதயத்தில் ஏற்று, அவரின் வரவால் நம் வாழ்க்கை முற்றிலுமாகத் திருப்பம் பெறச் செய்வதே இயேசு பற்றிய உண்மையான ''அறிவு''. ஆக, நாம் அறியாத ஒருவர் நம்மிடையே இருக்கிறார் என்றால் அவரை அறிந்துகொள்ள நாம் என்ன செய்கிறோம்?
மன்றாட்டு:
இறைவா, இயேசுவை நாங்கள் அறிந்து அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.
|