யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
திருவருகைக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2023-12-13
முதல் வாசகம்

எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. "என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை'' என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல் 103: 1-2. 3-4. 8,10

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்' கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்' அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்' என்றார்'' (லூக்கா 1'30-31)

மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான் மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின் வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர் என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர் உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப் பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.

மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின் சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது. ''இயேசு'' என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும் புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக் குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில் உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில் நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.