யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2023-12-03

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8,திருப்பாடல் 80: 1ac,2b. 14-15. 17-18 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9,புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

பேறுபெற்றவர்களே, திருவழிபாட்டு நாள்காட்டியின் புத்தாண்டு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். வெளியூர் பயணம் சென்றிருக்கும் வீட்டுத் தலைவரின் வருகைக்காக காத்திருக்கும் பணியாளரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவரின் வருகையின்போது பாராட்டு பெறும் வகையில் விழிப்புடன் வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8

ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து `எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
திருப்பாடல் 80: 1ac,2b. 14-15. 17-18

1ac இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! திபா 85: 7
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

விழித்திருக்க அழைப்பவரே இறைவா,

உமது திருமகனின் வருகைக்காக உலக மக்களைத் தயார் செய்யும் ஆர்வத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வல்லமை தருபவரே இறைவா,

போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை, உமது வருகைக்கு ஏற்ற இடமாக மாற்றுகின்ற வரத்தை, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒன்று சேர்ப்பவரே இறைவா,

எம் நாட்டு மக்கள் தவறான சமய நம்பிக்கைகளில் இருந்து விலகவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து உம்மைத் தேடி வரவும் அருள் புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!

யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு 13:35)

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற விழிப்பு அவரிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட பொறுப்பை முழுமனதோடு ஏற்று நடைமுறைப்படுத்துவதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க நமக்கு உந்துதல் தர வேண்டும். விழித்திருப்போர் தூக்க மயக்கத்தில் இருக்கமாட்டார்கள் (காண்க: மாற்கு 13:36). அவர்களுடைய இதயம் மழுங்கிய நிலையில் இருக்காது. மாறாக, விழித்திருப்போர் தம் இதயத்தைக் கடவுளுக்குத் திறந்து வைப்பார்கள்; அவர்களது இதயத்தில் கடவுள் நுழைந்திட யாதொரு தடையும் இருக்காது. எந்த நேரத்தில் கடவுள் அவர்களைத் தேடி வந்தாலும் அவர்கள் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்துவிட உடனடியாக முன்வருவார்கள். எனவே, இயேசு நம்மைப் பார்த்து, ''நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்'' என அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பு நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு சவால் கூட.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் விழிப்பாயிருந்து உம் வரவை எதிர்கொள்ள அருள்தாரும்.