யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் வெள்ளிக்கிழமை
2023-12-01
முதல் வாசகம்

வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14

இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின. அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப் போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது. அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது; தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. `எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது. இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறொரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன; அந்த விலங்குக்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன; அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரிநெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது. இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபடவேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58

52 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

53 நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 54 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

55 நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 56 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

57 வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 58 காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில் இயேசு ஓர் உவமை சொன்னார்: ``அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா !

இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வரிகள் இயேசுவின் வார்த்தைகளின் வலிமையை, சீர்மிகு செழுமையைப் பறைசாற்றுகின்றன. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா என்று ஆண்டவர் இயேசு ஆணித்தரமாகச் சொல்கிறார். இயேசுவைத் தவிர வேறு யார் இத்துணை அதிகாரத்தோடும், தன் உணர்வோடும் இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும்? இறைவார்த்தையின் சிறப்பை இதைவிட வலிமையாக யார் சொல்ல முடியும்? எனவேதான், பேதுரு ஆண்டவரே, நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நாங்கள் வேறு யாரிடம் போவோம் என்று அறிக்கையிட்டார்.

நாள்தோறும் இறைவார்த்தையை வாசிக்கின்ற, கேட்கின்ற, சிந்திக்கின்ற நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள் என்பதை நாம் உணர்கிறோமா? ஒருநாளும் அழியாத, நிலைவாழ்வு தருகின்ற இயேசுவின் வார்த்தைகளில் நாம் நம்பி;க்கை கொள்வோம். அந்த வார்த்தைகளைப் பற்றிக்கொள்வோம். அந்த வார்த்தைகளின்படி வாழ்ந்து பலன் தருவோம்.

மன்றாட்டு:

நிலைவாழ்வு தரும் வார்த்தைகளின் ஊற்றான இயேசுவே, உம் வாக்கு எம் காலடிக்கு விளக்கு. எம் பாதைக்கு ஒளியும் அதுவே. உம் வார்த்தைகளுக்காக நன்றி கூறுகிறோம். இந்த வார்த்தைகளால் பிறரும் வாழ்வடைய இறைவார்த்தையைப் பரப்பும நற்செய்தியாளர்களாக வாழ எங்களுக்கு அருள்தாரும். நாங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் நற்செய்தி நூல்களாக, உமது வார்த்தைகளை வாழ்வில் அறிக்கையிடுபவர்களாக வாழ்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.