யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் புதன்கிழமை
2023-11-29
முதல் வாசகம்

மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6 13-14 16-17 23-28

அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான். அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, ``என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்'' என்றான். அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: ``உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார்.'' பொறிக்கப்பட்ட சொற்களாவன: ``மேனே மேனே, தேகேல், பார்சின்'' இவற்றின் உட்பொருள்: `மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி ஏத்திப் போற்றுங்கள்.
தானி (இ) 1: 39-40. 41-42. 43-44

39 கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 40 விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

41 மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 42 காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

43 நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 44 நடுக்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

துன்பங்கள் சான்று பகரும் வாய்ப்புகள் !

துன்பமே இல்லாத சொகுசான ஒரு வாழ்வை இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக, தம்மைப் பின்பற்றுவோருக்குத் துன்பம் உண்டு என்றே தெளிவாகப் போதி;த்தார். ஆனால், அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலும், அந்தத் துன்பங்களின் இறுதியில் வெற்றியும் தருவாதாக வாக்களித்தார். இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள் என்று இன்றைய நற்;;;;;செய்தி வாசகம் எச்சரிக்கிறது. எனக்கு சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் இயேசு கூறுகிறார். அத்துடன், முன்னதாகவே கவலைப்பட வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார். எனவே, நம் வாழ்வில் நாம் சந்திக்கும் தோல்விகள், நோய்கள், அவமானங்கள், துன்பங்கள்... இவற்றைக் கண்டு நாம் கலங்க வேண்டாம். இவையெல்லாம் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதைக் காட்ட நமக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாம் சான்று பகர்வோம். புலம்பாமல், குறை கூறாமல், தாழ்வு மனம் கொள்ளாமல், செப வாழ்வை நிறுத்தி விடாமல், நம்பிக்கையை இழந்துவிடாமல் நாம் வாழும்போது, அதுவே நமது சாட்சிய வாழ்வு. எனவே, துன்பத்தைத் தேடி ஓட வேண்டாம். ஆனால், துன்பங்கள் வரும்போது கலங்காமல், வாய்ப்புகளாகப் பார்ப்போம்.

மன்றாட்டு:

எங்கள் துயரத்தையெல்லாம் களிநடமாக மாற்றுவதாக வாக்களித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். துன்பங்கள் சான்று பகரும் வாய்ப்புகள் என்று மொழிந்தீரே, உமக்கு நன்றி. கவலைப்படாதீர்கள் என்று சொன்னீரே, உமக்குப் புகழ். துன்ப வேளைகளில் சான்று பகரும் மனநிலையை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.