யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வியாழக்கிழமை
2023-11-23
முதல் வாசகம்

எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29

அந்நாள்களில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள். மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, ``நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், ``மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்'' என்று கூறினார். மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார். அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார். இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார். பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, ``திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்'' என்று உரத்த குரலில் கத்தினார். அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள். அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 1-2. 5-6. 14-15

தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். பல்லவி

5 `பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். ``இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' (லூக்கா 19:44)

எருசலேம் நகர் யூதர்களுக்கு முக்கியமான இடமாக விளங்கியது. அங்கேதான் யூத மக்களின் தலைசிறந்த மன்னராக விளங்கிய தாவீது தம் தலைநகரை அமைத்திருந்தார். அங்குதான் சாலமோன் மன்னர் கடவுளுக்கு அழகியதொரு கோவில் கட்டியெழுப்பினார். யூத மக்களின் சமய-சமூக மையமாக விளங்கிய எருசலேம் நகருக்கு வெளியேதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். எருசலேமுக்கு இயேசு எத்தனை தடவை சென்றார் என்பது பற்றித் தெளிவில்லை. எருசலேம் கோவிலுக்குள் நுழைந்து அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரை இயேசு விரட்டியடித்த செய்தியை எல்லா நற்செய்தி ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: மத் 21:12-17; மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22). அந்த நிகழ்ச்சிக்கு முன் இயேசு ''எருசலேமைப் பார்த்து அழுதார்'' (லூக் 19:41) என்னும் செய்தியை லூக்கா குறிப்பிடுகிறார். எருசலேம் நகரம் அழிந்துபடும் எனவும் இயேசு முன்னறிவிக்கிறார். இயேசு அறிவித்தபடியே, கி.பி. 70ஆம் ஆண்டில் தீத்து என்னும் உரோமை மன்னரின் படைகள் எருசலேமுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன; பலர் நாடுகடத்தப்பட்டார்கள்; எருசலேம் கோவிலும் நகரமும் தரைமட்டாக்கப்பட்டன. இத்தகைய அழிவு ஏற்பட்டதற்குக் காரணம்? யூத மக்கள் நடுவே வந்த மெசியாவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவேதான் எருசலேமை நோக்கி இயேசு, ''உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' என்றார்.

கடவுள் நம்மைத் தேடி வருகின்ற வேளைகளில் நாம் அவரைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். நம் கண்கள் திறந்திருப்பதுபோலத் தோன்றினாலும் நாம் உண்மையிலேயே பார்வையற்றுப் போகிறோம். கடவுள் நம்மைத் தேடி வருவதை நாம் எப்படிக் கண்டுகொள்வது? கடவுள் நம்மைத் தேடி வருகிறார் என்பதன் முதல் பொருள் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதே. நம்மிடம் இருக்கின்ற ஒரு பொருளை நாம் தேடிச் செல்வதில்லை. அதுபோல நாமும் கடவுளை நம் உள்ளத்தில் ஏற்கெனவே கொண்டுள்ளதால் அவரைத் தேடி வெளி உலகில் அலைய வேண்டியதில்லை. கடவுள் குடிகொள்ளாத மனிதர் யாரும் இல்லை. எனவே கடவுளை அறிய வேண்டும் என்றால் நாம் பிற மனிதரை அன்புசெய்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் உலக நிகழ்ச்சிகள் வழியாகவும் நம்மோடு பேசுகிறார். நமது நம்பிக்கை அனுபவத்தின் வழியாக அவர் நம்மை அணுகி வருகிறார். அவரைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கை என்னும் நம் அகக்கண்களை நாம் அகலத் திறக்கவேண்டும். அப்போது அவருடைய வருகை நமக்கு மகிழ்ச்சியைக் கொணரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களைத் தேடி வருகின்ற உம்மை அன்போடு எங்கள் உள்ளங்களில் ஏற்றிட அருள்தாரும்.