யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-11-19

(இன்றைய வாசகங்கள்: நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31,திருப்பாடல் 128: 1-2. 3. 4-5 ,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

நம்பிக்கைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் நமக்கு வழங்கிய ஒவ்வொரு பணியையும் எப்படி நிறைவேற்றினோம் என்பதற்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு நினைவூட்டுகிறார். ஆண்டவரின் திட்டத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை அமைந்துள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க நம்மை அழைக்கிறார். ஆண்டவரிடம் பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட வரம் கேட்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.முதல் வாசகம்

திறமை வாய்ந்த பெண், தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 15: 4a, 5b
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

விண்ணகத் தந்தையே இறைவா,

திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி, இவ்வுலகில் இறையாட்சியை நிறுவ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நலம் அருள்பவரே இறைவா,

சோம்பல், ஆர்வமின்மை போன்ற காரணங்களால் நீர் வழங்கிய திறமைகளை சரியாக பயன்படுத்தாமல் வாழும் அனைவரும், மனந்திரும்பி பொறுப்புடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

குணம் அளிப்பவரே இறைவா,

உலக நாட்டங்களாலும், உடல் இச்சைகளாலும் பாவத்தில் உழலும் மக்கள் அனைவரும், உமது இரக்கத்தால் மனந்திரும்பி, ஞானத்தோடு உம்மை எதிர்கொள்ள அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!

யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியின் இறைவா!

இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் நிலவும் போர்காலப் பதட்டை தவிர்த்திடும். மக்கள் ஒரே குடும்பமாக இவ்வுலகில் வாழ்ந்திட, அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த வாழ்வு வாழ, உலகநாட்டு தலைவர்களை வழிநடத்தி தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா!

எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றச் சமயவாழ்வு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நிலைக்கு ஏற்பச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, உலகத்தால் கறைபடாதபடி எம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்…

பரிவுடன் எங்களை அரவணைக்கும் தந்தையே எம்இறைவா!

இவ்வலகைவிட்டுப் பிரிந்துச் சென்ற உம் அடியார்கள் அனைவரையும் நினைவுகூர்கிறோம். அனைவரும் உமது பேரின்பவீட்டில் சேர்த்துக்கொள்ளும். குறிப்பாக யாரும் நினையாத குருக்கள், இருபால்துறவியர்கள் அனைவரையும் தாவீது கூறியதுபோல உம் தூயகத்தில் தங்கிட அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா!

இன்றைய காலகட்டத்தில் இச்சமுகத்தில் எங்கள் குடும்பத்தினர்கள் எதிர் கொள்ளும் சோதனைகளிலும், வேதனைகளிலும் சோர்ந்து போகாமல் விழிப்புடனிருந்து வெற்றிக் கொள்ளவும், தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் தேவையான ஞானத்தையும் முன்மதியும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்'' (மத்தேயு 25:20)

இறையாட்சி பற்றி இயேசு கூறிய உவமைகளுள் ''தாலந்து உவமை'' சிறப்பானது. தாலந்து என்னும் நாணயம் வெள்ளியாகவோ பொன்னாகவோ இருக்கலாம். பத்து ஆண்டுகள் வேலை செய்தால் கிடைக்கின்ற கூலி ஒரு வெள்ளி தாலந்துக்கும் அதைப் போல முப்பது மடங்கு ஒரு பொன் தாலந்துக்கும் மதிப்பு உண்டு. எனவே, தாலந்தின் எண்ணிக்கை ஐந்தோ, இரண்டோ, ஒன்றோ எதுவாக இருந்தாலும் அதன் மதிப்பு உண்மையிலேயே பெரிதுதான். இவ்வாறு பெருந்தொகையைப் பெற்ற மூவருள் இருவர் மட்டுமே அத்தொகையைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் தாம் பெற்ற பணத்தைப் புதைத்துவைக்கிறார். திருடர்களின் கண்களில் பணம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு முன்மதியோடு செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவர் தாம் பெற்ற பணத்தை நன்முறையில் முடக்கி, மேலும் அதிக பணம் திரட்ட முன்வரவில்லை. இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகின்ற செய்தி என்ன? கடவுளின் ஆட்சி என்பது நம்மேல் திணிக்கப்படுகிற ஒன்று அல்ல. அது கடவுள் நமக்குத் தருகின்ற கொடை. ஆனால் அக்கொடையைப் பெற்ற நாம் சோம்பேறிகளாக இருத்தல் ஆகாது. நாம் பெற்ற கொடையை நன்றியோடு ஏற்க வேண்டும்; அதே நேரத்தில் அக்கொடை நமக்கும் பிறருக்கும் பயன்படுகின்ற விதத்தில் நாம் விழிப்பாகச் செயல்பட்டு, பெரு முயற்சி செய்து அதை மேம்படுத்த வேண்டும்.

''இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்'' என்று கூறிய பணியாளர் தம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. மாறாக, பொறுப்புணர்வோடு செயல்பட்டார். அவ்வாறு பொறுப்புணர்வோடு செயல்பட்டதால்தான் தலைவர் அவரைப் பார்த்து, ''என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்'' எனக் கூறி வரவேற்கிறார். கடவுள் வழங்குகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்ப வேண்டும். அவரோடு ஆழ்ந்த உறவு கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மைத் தேடி வந்து தம் அன்புப் பிணைப்பில் நம்மை அணைத்துக் கொள்வதால் நாம் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். எனவே, கடவுளின் ஆட்சியில் பங்கேற்க விழைவோர் பொறுப்போடு செயல்பட வேண்டும். தம் தலைவராகிய கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப ஒழுக வேண்டும். அப்போது ''என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்'' என்னும் அழைப்பு நம்மையும் வந்துசேரும் (காண்க: மத்தேயு 25:21,23).

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை மண்ணில் புதைத்துவைக்காமல் நன்முறையில் பயன்படுத்த அருள்தாரும்.