யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் செவ்வாய்க்கிழமை
2023-11-14




முதல் வாசகம்

அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் இருந்தவர்கள் அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23- 3: 9

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர்மீது இருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.
திருப்பாடல் 34: 1-2. 15-16. 17-18

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். - பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

ஆண்டவர் உரைத்தது: “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்'' (மத்தேயு 18:14)

சிறு குழந்தைகளை இயேசு அன்போடு வரவேற்றார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உண்டு. குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத அக்காலத்தில் உண்மையான சீடர் குழந்தையைப் போல மாற வேண்டும் என்று இயேசு கேட்டது வியப்பாகத் தோன்றலாம். குழந்தைகள் தம் பெற்றோரையோ வேறு பெரியவர்களையோ சார்ந்துதான் வாழ முடியும். அவர்களுடைய நலமான வளர்ச்சிக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் தேவை. சீடரும் சிறுபிள்ளைகளைப் போல இருக்க வேண்டும் என்பது அவர்கள் கடவுள்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் எனப் பொருள்படும். கடவுளைச் சார்ந்துதான் நம்மால் வாழ முடியுமே ஒழிய, நம் சொந்த சக்தியால் நாம் எதையும் சாதிக்க இயலாது. எனவே, கடவுளின் அரசில் நாம் பங்குபெற வேண்டும் என்றால் நாமும் கடவுளின்முன் சிறுபிள்ளைகளைப் போல மாற வேண்டும். இவ்வாறு இயேசுவின் சீடராக மாறுகின்றவர்கள் நன்னெறியில் நடக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அவர்களுக்கு யாதொரு தீங்கும் ஏற்படலாகாது என்பதில் கடவுள் கருத்தாயிருக்கிறார். -- சிறு பிள்ளைகளைப் போல நாமும் கடவுளை அணுகிச் செல்லும்போது நமது மன நிலை மாற்றம் பெற வேண்டும். கடவுளையே முழுமையாக நம்பி நாம் வாழும்போது நமது சொந்த விருப்பப்படி நடவாமல் கடவுளின் விருப்பப்படி நடக்க நாம் முயல்வோம். அதுபோலவே, பிறரும் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருக்க நாம் அவர்களுக்குத் துணை செய்வோம். தவறிப்போன ஆட்டினைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கின்ற ஆயரைப் போல நம் கடவுளும் நம்மைத் தேடி வருகின்றார். அவரது அன்பிலிருந்து அகன்று சென்றுவிடாமல் நாம் அவர் காட்டுகின்ற வழியில் எந்நாளும் நடந்திட வேண்டும். அப்போது இயேசுவின் உண்மையான சீடராக நாம் வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, சிறு பிள்ளைகளின் உள்ளத்தோடு உம்மையே எந்நாளும் நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.