முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 31வது வாரம் புதன்கிழமை 2023-11-08
முதல் வாசகம்
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ``விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ``உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.
அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்
திருப்பாடல்கள் 112: 1-2. 4-5. 9
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி
9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: ``என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்!
இயேசுவின் இந்த உவமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், வியப்புதான் மேலிடும். காரணம், திருமண விருந்துக்கு வர மறுப்பது என்பது சற்று வியப்பான செய்திதான். அதிலும் ஒவ்வொருவரும் சொன்ன சாக்குபோக்குகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஆம், இயேசு சொன்ன உவமையின் நோக்கமும் அதுதான். இறைவன் தருகின்ற விருந்தில் பங்கு கொள்வதற்கு நாம் மிகவும் தயங்குகிறோம். அதுவே வியப்புக்குரியதுதான். அதிலும் அத்தயக்கத்துக்கான காரணங்களாக நாம் முன்வைக்கும் காரணங்கள் அதிலும் வியப்புக்குரியவை என்பதை நமக்கு விழிப்பூட்டவே இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கிறார்.
இறையாட்சியின் விருந்திற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த விருந்து நிறைவான, நிலையான, அழியாத விருந்து. அந்த விருந்தை நாம் திருப்பலியிலும், இறைமொழியிலும், இறை அனுபவங்களிலும் பெறுகிறோம். ஆனாலும், அந்த விருந்தின்மீது நாம் அதிக ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, அழிந்து போகின்ற உணவு, பொழுதுபோக்குகள், நிறைவற்ற உறவுகள்... இவற்றில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். அத்துடன், இறையாட்சியின் விருந்தில் கலந்துகொள்ளாததற்கு நாம் ஆயிரம் சாக்குபோக்குகளைச் சொல்கிறோம். நேரமில்லை, களைப்பாக இருக்கிறது, மனநிலை சரியில்லை... இன்ன பிற சாக்குகளை எளிதாகச் சொல்லிவிடுகிறோம். இயேசு சொன்ன உவமை நமக்குத்தான் என்பதை உணர்ந்து, சாக்குபோக்குகளைக் களைந்து ஆர்வத்துடன் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்வோம்.
மன்றாட்டு:
விருந்தின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் தருகின்ற செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் என்பதை உணர்ந்து, நீர் தரும் அழைப்புக்காக நன்றி கூறுகிறோம். இந்த அழைப்பை முழு மனதுடன் ஏற்று, உமது விருந்தில் தகுதியுடன் பங்குபெற எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|