யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் திங்கட்கிழமை
2023-11-06




முதல் வாசகம்

இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ``ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.
திருப்பாடல்கள் 69: 29-30. 32-33. 35-36

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடன் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்'' (லூக்கா 14:13)

இறந்தோர் நினைவாக விருந்து கொடுப்பது பொருள்செறிந்த ஒரு பழக்கம். அப்போது ''புண்ணிய ஆத்மாக்களை'' அழைக்கவேண்டும் என்று உண்மையிலேயே ஊரிலுள்ள ஏழை எளிய மக்களை அழைத்து, அவர்களை அன்போடு வரவேற்றுப் பந்தியமர்த்தி, ''அசனம் கொடுத்து'' உபசரித்து, அவர்களுக்குப் புதிய உடைகளையும் அளித்து வழியனுப்புவது தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே வழக்கத்தில் உண்டு. இந்த நிகழ்ச்சியின் உட்பொருளைப் பார்த்தால் இயேசு யார்யாரைப் பந்திக்கு அழைப்பது என்பது பற்றிக் கூறிய உவமையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளலாம். நாம் செய்கின்ற நல்ல செயல்களுக்கு நன்றி செலுத்துகின்ற விதத்தில் பிறர் நமக்குக் கைம்மாறு செய்கின்ற நேரங்கள் உண்டு. ஆனால், எந்தவொரு கைம்மாற்றையும் எதிர்பாராமல் நன்மையை நன்மையின்பொருட்டே நாம் செய்வதுதான் பொருளுடைத்தது என இயேசு நமக்குக் கற்பிக்கின்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழைகளுக்கும் ஊனமுற்ற மக்களுக்கும் மதிப்பு இருக்கவில்லை. அவர்களுடைய இழிநிலைக்குக் காரணம் அவர்களுடைய பாவமே என்றொரு தவறான கருத்தும் நிலவியது. ஆனால் இயேசுவின் பார்வை அதுவன்று. பிறருக்கு இயல்பாகவே விளைகின்ற தீங்குகள் அவர்களுடைய பாவத்தின் விளைவே என நாம் முடிவுசெய்வதும் தவறு, அம்முடிவின் அடிப்படையில் நம்மையே நாம் உயர்த்தி எண்ணுவதும் தவறு எனவும் இயேசு காட்டுகின்றார். மனிதர் புரிகின்ற நற்செயல்களுக்கான கைம்மாறு இவ்வுலகிலேயே கிடைத்துவிடுவதில்லை; ஏனென்றால், கடவுள் அவசரப்பட்டுச் செயல்படுவரல்ல, அவர் மிகுந்த பொறுமையுடையவர். எனவே, நல்லதும் தீயதும் தம் விளைவைக் கொணர்வதற்குக் காலம் பிடிக்கலாம். ஆனால் நல்லது செய்வோர் தமக்கு நல்லதே விளையும் என்னும் நம்பிக்கையினின்று தளர்ந்துபோகலாகாது என இயேசு நமக்கு உணர்த்துகின்றார். கைம்மாறு கருதாமல் உதவுவதற்கு மழையை உருவமாகக் காட்டுவார் வள்ளுவர்: ''கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு'' (குறள் 211). காலம் பொய்க்காமல் வானிலிருந்து துளியாக இறங்கி நிலத்தை நனைத்து, பயிர் செழிக்கச் செய்து, மனிதரின் தாகத்தைப் போக்குகின்ற மழைநீர் மனிதரிடமிருந்து கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை; சான்றோரும் கைம்மாறு எதிர்பாராமல் உதவிசெய்வர் என்னும் வள்ளுவர் கூற்று இயேசுவின் போதனைக்கு அரணாகிறது எனலாம்.

மன்றாட்டு:

இறைவா, நன்மைக்கு ஊற்றே நீர் ஒருவரே என உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.