முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 30வது வாரம் வியாழக்கிழமை 2023-11-02
இறந்த விசுவாசிகள் நினைவு நாள்
முதல் வாசகம்
ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25:6-9
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். "
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண் டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையவில்லை
திருப்பாடல்கள் 23:1-3, 4, 5, 6
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; -பல்லவி
4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி
இரண்டாம் வாசகம் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:5-11அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11.25
அல்லேலூயா, அல்லேலூயா! “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு,
'அழாதீர்' என்றார்'' (லூக்கா 7:17)
உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும் பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது இயேசுவின் சீடருக்கு அழகு. தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். வள்ளுவரும் நட்புப் பற்றிப் பேசும் போது ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'' என்று போற்றியுரைப்பார் (குறள் 788). நட்பையும் விஞ்சிச் செல்வது இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்பு. கடவுளின் பண்பே அன்புதானே!
மன்றாட்டு:
இறைவா, குறிப்பறிந்து உதவி செய்ய எங்களுக்கு நன்மனதைத் தந்தருளும்.
|