யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வெள்ளிக்கிழமை
2023-10-27
முதல் வாசகம்

சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25

சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
திருப்பாடல்கள் 119: 66,68. 76,77. 93,94

66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். -பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். -பல்லவி

93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர். 94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

நீங்களே வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள் !

இயேசு மக்கள் கூட்டத்துக்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பது. இயேசுவின் இந்த வாக்கு எத்துணை ஞானம் நிறைந்தது, இந்த நூற்றாண்டுக்கும் எத்துணை பொருத்தமானது என்பதை எண்ணி, எண்ணி வியக்கிறோம். இன்றைய நாள்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குடும்ப நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான வழக்குகள் குவிகின்றன. சொத்துச் சண்டை, பாகப் பிரிவினை என்பது தனி நபர்களுக்குள் மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேகூட உருவாகி, மாநிலங்களும் வழக்கு தொடுக்கின்ற காட்சிகளை இன்று காண்கிறோம்.

நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பண விரயம், கால விரயம், மன உளைச்சல், தொடரும் பகை உணர்வு முதலியனதான் ஏற்படுகின்றனவே ஒழிய, நேர்மையான, அனைவருக்கும் ஏற்புடைய தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, இயேசுவின் அறிவுரை முன் எப்போதையும்விட இக்காலத்துக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. வழக்கு மன்றங்களுக்குச் செல்வதற்கு முன் உரையாடல் வழி சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று முயற்சி செய்ய வேண்டும். இயேசுவின் சொற்களைக் கவனிப்போம்: வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவர்;களின் துணையோடு இந்த முயற்சிகள் வெற்றி பெறும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்குமே! நமது அலுவலகங்களிலும் சிக்கல்களை மேலிடத்துக்கு எடுத்துச்n செல்லும் முன் நாமே அவற்றைத் தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்வோமா?

மன்றாட்டு:

ஞானம் நிறை நாயகனே இயேசுவே, நீர் தந்த இந்த ஞானம் நிறை வார்த்தைகளுக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை, சிக்கல்களை உரையாடல் மூலமே தீர்த்துக்கொள்ள எங்களுக்கு ஞானமும், நல்லறிவும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.