யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் புதன்கிழமை
2023-10-25
முதல் வாசகம்

இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள். பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது. எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
திருப்பாடல்கள் 124: 1-3. 4-6. 7-8

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. -பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியும் !

இயேசுவின் சீடரிடம் இருக்கவேண்டிய இரு முக்கியமான பண்புகளை இன்றைய வாசகம் சுட்டிக்காட்டுகிறது: அவர்கள் நம்பிக்கைக்குரியவரும், அறிவாளியுமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஆண்டவர். இயேசு தம் சீடரிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். நற்செய்தி அறிவித்தல், சான்றுகளாய் வாழ்தல், நலப்படுத்துதல் போன்ற பணிகளே அவை. இப்பணிகளை நாம் நம்பிக்கைக்குரிய விதத்தில் ஆற்றவேண்டு;ம் என எதிர்பார்க்கிறார் இயேசு. யாரெல்லாம் இப்பணிகளை நம்பிக்கைக்குரிய விதத்தில் நிறைவேற்றுகிறார்களோ, அவர்களே திருச்சபையால் புனிதர்கள் என்று ஏற்பிசைவு செய்யப்படுகிறார்கள். இரண்டாவது பண்பு: அறிவாற்றல். அறிவுக் கூர்மையுடன் காலத்தின் தேவைகளை அறிந்து, செயல்படுபரே நல்ல சீடர். இந்த அறிவு மறையறிவு, இறைமொழி அறிவு, பொது அறிவு, உளவியல் அறிவு என முழமையான அறிவாற்றலாக இருத்தல் வேண்டும். இயேசு நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். தந்தை இறைவன் அவரிடம் ஒப்படைத்த பணியை இயேசு நம்பிக்கைக்குரிய விதத்திலும், அறிவாற்றலுடனும் செயல்படுத்திக்காட்டினார். தந்தையின் பாராட்டைப் பெற்றார். இவரே என் அன்பார்ந்த மகன், இவரில் நான் பூரிப்படைகிறேன் என்று வாழ்த்தினார். நாமும் நமது கடமைகளை, பொறுப்புகளை நம்பிக்கைக்குரிய விதத்திலும், அறிவாற்றலுடனும் ஆற்றி, இயேசுவின் பாராட்டை, திருச்சபையின் ஏற்பிசைவைப் பெறுவோமா!

மன்றாட்டு:

எங்களைப் பெயர் சொல்லி அழைத்த அன்பின் தெய்வமே, இயேசுவே. உம்மைப் போற்றுகிறோம். நீர்; எங்களுக்குத் தந்த அழைத்தலின்படி, நாங்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும் பணி செய்ய எங்களுக்கு உமது தூய ஆவியை நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.