திருவழிபாடு ஆண்டு - A 2023-10-22
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6,திருப்பாடல் 96: 1,3. 4-5. 7-8. 9-10,
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21)
திருப்பலி முன்னுரை
அன்புமிக்க இறைத்தந்தைக்கும், இறைச்சமுகத்திற்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்; இனிய வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறை நம் தாயாம் திருச்சபையோடு கொண்டாடுகின்றோம். நாம் அனைவரும் தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்ந்து, வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொண்டு. உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்க வேண்டுமென இறைவன் விரும்புகின்றார். அதற்கான ஆற்றலையும், வலிமையையும் அவரே தருகின்றார். அத்தோடு நாம் இறைவனுக்குரியதை அவருக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு ஆழமான அறிவுறுத்தலும் நமக்குக் கொடுக்கப்படுகின்றது. இந்தச் சிந்தனைகளை உள் வாங்கிய நாம், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொண்டு, தூய உள்ளத்துடன் ஆண்டவரை வழிபட்டு, உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்கி, 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்: அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார் என்னும் உண்மையை நம் வாழ்வால் எடுத்துரைத்து, ஆண்டவரை மாட்சிமைப்படுத்த வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.
நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
திருப்பாடல் 96: 1,3. 4-5. 7-8. 9-10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
4 ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. 5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி
7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி
9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி
இரண்டாம் வாசகம் உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், உங்கள் மனவுறுதியையும் நினைவுகூருகிறோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம்.
கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! பிலி 2: 15-16 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21
அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்'' என்று அவர்கள் கேட்டார்கள்.
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, ``வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்'' என்றார்.
அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார்.
அவர்கள், ``சீசருடையவை'' என்றார்கள்.
அதற்கு அவர், ``ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை அவர்களும் கொண்டு, தமது பணிப்பொறுப்புக்களில் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!
எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்கள் தந்தையாகிய தந்தையே! துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருள்கொடையின் நாயகனே எம் இறைவா!
இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.
அமைதியின் இறைவா! இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் நிலவும் போர்காலப் பதட்டை தவிர்த்திடும். மக்கள் ஒரே குடும்பமாக இவ்வுலகில் வாழ்ந்திட, அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த வாழ்வு வாழ, உலகநாட்டு தலைவர்களை வழிநடத்தி தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! கிறிஸ்துவின் வார்த்தைகளைச் செவிக்கு உணவாக உட்கொண்ட நாங்கள் மேன்மேலும் அவராகவே மாறச் செய்தருளும். எங்கள் வாழ்வில் எல்லாச் சூழ்நிலைகளிலும், சிறப்பாக எங்களது குடும்ப வாழ்க்கையிலும், கிறிஸ்துவின் மனநிலையை நாங்கள் எமதாக்கிக் கொண்டு ஒருவரையொருவர் ஏற்று, ஒன்றிணைந்து உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எம் குற்றங்களையும், குறைகளையும் நினையாத எம் இறைவா!
எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தத்தம் பணிகளை செவ்வனே செய்யவும், அதன்மூலம் தம் வாழ்வின் நிறைவை மகிழ்வாய் பெற்று உமது சாட்சிகளால் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் வாழ நடத்த தேவையான இரக்கத்தையும் பொறுமையையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' (மத்தேயு 22:21)
சீசர் என்றும் கடவுள் என்றும் இயேசு வேறுபடுத்திக் கூறுகிறார் எனப் பொருள்கொண்டு அரசியலுக்கும் சமயத்திற்கும் இடையே உறவு இருக்கக் கூடாது என்று இயேசுவின் சொற்களுக்குச் சிலர் தவறாகப் பொருள்விளக்கம் தருவதுண்டு. அரசியலில் சமயக் கருத்துக்கள் நுழையும்போது சமயச் சார்பற்ற தன்மை ஆபத்துக்கு உள்ளாகக் கூடும் என்பது தெளிவு. அதே நேரத்தில், கடவுள் மனிதரிடம் எதிர்பார்க்கின்ற நற்பண்புகள் அரசியலில் துலங்கவேண்டும் என்பதையும் நாம் மறத்தலாகாது. எனவேதான் காந்தியடிகள் சமயத்தில் ஊன்றியிராத அரசியல் மக்களைச் சுறண்டுகின்ற அரசியலாகும் என்றார். உரோமைப் பேரரசர்களுக்கு ''சீசர்'' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. அதற்கு ''அரசர்'' என்று பொருள். இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனப் பகுதி உரோமையரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. எனவே, உரோமைக்கு வரிசெலுத்தப் பயன்படுத்தப்பட்ட நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது, சீசரின் நாணயத்தை சீசருக்குக் கொடுப்பது சரியே என்றாலும் கடவுளின் சாயலை (''உருவை'') மனிதர் தாங்கியிருப்பதால் (காண்க: தொநூ 1:27) மனிதர் கடவுளுக்கே சொந்தமானவர்கள் என்னும் ஆழ்ந்த உண்மையை இயேசு உணர்த்தினார்.
கடவுளுக்கு நாம் காணிக்கையாகக் கொடுப்பது வெறும் நாணயத்தை அல்ல, மாறாக நம்மையே நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். ஏனென்றால் நாம் கடவுளின் உருவிலும் சாயலிலும் உண்டாக்கப்பட்டிருக்கின்றோம். கடவுளின் சாயலாக மனிதர் இருப்பதால் மனிதருக்கு இயல்பாகவே மாண்பு உண்டு. அந்த மாண்பினை நமக்கு அளிப்பது இந்த உலகில் ஆதிக்கம் செலுத்துகின்ற யாரும் அல்ல, மாறாக கடவுளே மனித மாண்புக்கு அடிப்படையாக உள்ளார். எனவே, நாம் கடவுளின் சாயலைத் தாங்கியிருப்பதுபோலப் பிறரும் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து நாம் ஒருவரை ஒருவர் மனித மாண்போடு நடத்திட அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு:
இறைவா, உமது படைப்பாக விளங்குகின்ற நாங்கள் எங்களை முழுதும் உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.
|