யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் வியாழக்கிழமை
2023-10-12
முதல் வாசகம்

இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 13 -4:2a

``எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்,'' என்கிறார் ஆண்டவர். ஆயினும், ``உமக்கு எதிராக என்ன பேசினோம்?'' என்று கேட்கிறீர்கள். கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைபிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்து கொள்வதாலும் நமக்கு என்ன பயன்? இனிமேல் நாங்கள், `ஆணவக்காரரே பேறுபெற்றோர்' என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?'' அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது. ``நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவது போல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன். அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள். ``இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்,'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்
திருப்பாடல்கள் 1: 1-2. 3. 4,6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்காலத்தில் இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்க நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!' என்றார்'' (லூக்கா 11:13)

இறைவேண்டல் கிறிஸ்தவ வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இயேசு இறைவேண்டல் பற்றி அளித்த போதனைகளையும், தாமே இறைவேண்டலில் பல முறை நேரம் செலவிட்டதையும் லூக்கா பதிவுசெய்துள்ளார். பிள்ளைகள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு நல்லது செய்யவே பெற்றோர் விரும்புவர். அதுபோல, கடவுளை நாம் அண்டிச் சென்று நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். கடவுளிடம் நாம் கேட்பவை எல்லாம் எப்போதும் நாம் கேட்டபடியே கிடைத்துவிடும் என்று கூற முடியாது. ஆனால் கடவுள் நமக்குத் தம் நற்கொடைகளையே தருவார் என்பது மட்டும் உறுதி.

நாம் கடவுளிடம் கேட்பது நமக்குக் கைகூடாவிட்டாலும் ஒன்று மட்டும் உறுதியாக நமக்கு அளிக்கப்படும். அந்த நற்கொடையின் பெயர் ''தூய ஆவி''. இயேசுவே இதைத் தெளிவாகப் போதித்துள்ளார்: ''விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பார்'' (காண்க: லூக் 11:13). இது நமக்குச் சிறிது வியப்பாக இருக்கலாம். நாம் கேட்கும் மன்றாட்டு எதுவாக இருந்தாலும் கடவுள் நமக்குத் ''தூய ஆவியை''க் கொடுப்பார் என்பதன் பொருள் என்ன? தூய ஆவி என்பது கடவுளிடமிருந்து நமக்கு வழங்கப்படுகின்ற கொடை. கடவுள் நம்மோடு தங்கியிருந்து நம்மை அன்போடு வழிநடத்துகிறார் என்பதற்கு அவர் நமக்கு வழங்குகின்ற தூய ஆவியே சான்று. கடவுளிடமிருந்து வருபவர் தூய ஆவி; அவரே கடவுளாகவும் இருக்கிறார். எனவே, நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுதியாகத் தூய ஆவி வழங்கப்படும். கடவுள் வழங்கும் தூய ஆவி நம்மில் ''வல்லமையோடு'' செயலாற்றுபவர். நம்மை உண்மை வழியில் இட்டுச் செல்பவர். நன்மை தீமையை வேறுபடுத்தி உணர நமக்குச் சக்தி தருபவர். எனவே, நாம் நம்பிக்கையோடு கடவுளிடம் வேண்டுதல் செய்யும்போது கடவுளின் துணை நமக்கு உண்டு.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிமடுத்து எங்களை வழிநடத்தும் உம்மை எந்நாளும் நம்பி வாழ்ந்திட அருள்தாரும்.