யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் சனிக்கிழமை
2023-10-07
முதல் வாசகம்

ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள். கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: ``சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார். கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்.
திருப்பாடல் 69: 32-34. 35-36

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. 34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். -பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

அக்காலத்தில் அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, ``ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர். அதற்கு அவர், ``வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார். அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். ``என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, ``நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

எதைப் பற்றி மகிழ ?

இயேசுவின் சீடர்கள் தம் நற்செய்திப் பணியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, மகிழ்ச்சியின் படிமுறை பற்றி அவர்களுக்குப் பாடம் எடுக்கிறார் இயேசு. இயேசுவின் பெயரைச் சொல்லி பேய்களை ஓட்டிய பெருமையைப் பறைசாற்றும் சீடர்கள் தீய ஆவிகளை அடிபணிய வைத்தது பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர். இயேசு அவர்களின் மகிழ்ச்சியை ஏற்பிசைவு செய்கிறார். இயேசு கொடுத்த அதிகாரம் அவர்களுடன் இருப்பதால் எதுவுமே அவர்களுக்குத் தீங்கு இழைக்காது என்று உறுதி அளிக்கிறார். ஆனாலும், தீய ஆவிகள் தங்களுக்கு அடிபணிகின்றன என்பதைவிட தங்களின் பெயர்களின் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

நாமும் மகிழ்ச்சியி;ன் இந்தப் படிமுறையை நம் வாழ்வாக்கிக் கொள்வோம். இரண்டு வகையான மகிழ்ச்சிகள் நம் வாழ்வில் ஏற்படலாம். உலகு சார்ந்த வெற்றிகள், பரிசுகள், பொருளாதார இலாபங்கள், நிறைவேறிய கனவுகள்... போன்றவை நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், இவை மேலோட்டமான மகிழ்ச்சிகளே. இவற்றைவிட மேலான, ஆழமான மகிழ்ச்சியை இறைவன் மட்டுமே தரமுடியும். நம் வாழ்வு இறைவனுக்கு ஏற்புடையதாக அமையும்போது, நாம் இறைவனின் வார்த்தைகளின்படி வாழும்போது, நமது பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்படுகின்றன. அந்த மகிழ்ச்சியே நிறைவான, நிலையான மகிழ்ச்சி. அத்தகைய மகிழ்ச்சிக்காக உழைப்போமாக!

மன்றாட்டு:

மகிழ்ச்சியின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்த உலகம் சார்ந்த மகிழ்ச்சிகளுக்காக ஏங்காமலும், உழைக்காமலும், நீர் தருகின்ற நிலையான மகிழ்ச்சிக்காக உழைக்கவும் எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.