யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் புதன்கிழமை
2023-10-04




முதல் வாசகம்

உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8

மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவாகிய நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன். மன்னர் என்னைப் பார்த்து, ``ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மன வேதனையே அன்றி வேறொன்றுமில்லை\'\' என்றார். நானோ மிகவும் அஞ்சினேன். நான் மன்னரை நோக்கி, ``மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டிருக்கும்போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?\'\' என்றேன். அதற்கு மன்னர் என்னை நோக்கி, ``உனக்கு என்ன வேண்டும்?\'\' என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். நான் மன்னரைப் பார்த்து, ``நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்\'\' என்று கூறினேன். அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, ``உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?\'\' என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால், திரும்பி வரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன். மீண்டும் மன்னரைப் பார்த்து, ``உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும் வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்க இருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்\'\' என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்
திருப்பாடல் 137: 1-2. 3. 4-5. 6

1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். 2 அங்கிருந்த அலரிச் செடிகள்மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். பல்லவி

3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். `சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்\' என்றனர். பல்லவி

4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! பல்லவி

6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பிலி 3: 8-9 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில் இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ``நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்\'\' என்றார். இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை\'\' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, ``என்னைப் பின்பற்றி வாரும்\'\' என்றார். அவர், ``முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்\'\' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்\'\' என்றார். வேறொருவரும், ``ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்\'\' என்றார். இயேசு அவரை நோக்கி, ``கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல\'\' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஒருவர் 'முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்' என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்' என்றார்'' (லூக்கா 9:59-60)'

இயேசு தம்மைப் பின்பற்றும்படி பலரிடம் கேட்டதுண்டு. ஒரு சிலர் அவருடைய அழைப்பை ஏற்றனர். வேறு சிலர் தாம் பெற்ற அழைப்பை ஏற்கவில்லை. இத்தகைய ஒரு மனிதர் இயேசுவிடம், ''முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' எனக் கேட்கிறார் (லூக் 9:59). இக்கோரிக்கை நமக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் இயேசு வாழ்ந்த காலத்தில் நிலவிய ஒரு பழக்கத்தை நாம் இங்குக் காண்கிறோம். அதாவது, வீட்டில் பெற்றோர் இறந்துவிட்டால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பொறுப்பு பிள்ளைகளைச் சார்ந்தது. அவர்கள் இப்பொறுப்பை மிக்க கரிசனையோடு நிறைவேற்ற வேண்டும் என்னும் பழக்கம் இஸ்ரயேலர் நடுவே நிலவியது. யூத குருக்களும் தம் பெற்றோரை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கடமை இருந்தது. இறந்தோரை அண்டிச் செல்லும்போது வழிபாடு தொடர்பான தூய்மை கெட்டுவிடும் என்னும் சட்டம் இருந்தாலும் இறந்தோரை அடக்கம் செய்யும் கடமை அதைவிட மேலானதாகக் கருதப்பட்டது. எனவே, வீட்டுக்குச் சென்று ''முதலில்'' தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு இயேசுவைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த அந்த மனிதர் தம் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டினார் என நாம் அறியலாம். அக்கடமையை ''முதலில்'' நிறைவேற்றிவிட்டு, அதற்குப் ''பிறகு'' இயேசுவைப் பின்செல்வதாகக் கூறிய அம்மனிதருக்கு இயேசு அளித்த பதில் நமக்கு வியப்பாகத் தோன்றலாம்.

இயேசு ''இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார் (லூக் 9:60). இது மூல மொழியில் ''இறந்தோர் இறந்தோரை அடக்கட்டும்'' என்றுள்ளது. இதற்கு, ''ஆன்மிக முறையில் செத்துப் போனவர்கள் இறந்தவர்களை அடக்கும் பொறுப்பை நிறைவேற்றட்டும்'' என்று பலர் பொருள்கொள்வர். இருப்பினும் அக்கால வழக்கப்படி இரண்டு அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இறந்தவரின் சடலத்தை முதலில் அடக்கம் செய்வார்கள். பின், ஏறக்குறைய ஓர் ஆண்டு கழிந்த பிறகு கல்லறையைத் தோண்டி இறந்தவரின் எலும்புகளை எடுத்து இன்னோர் இடத்தில் அடக்கம் செய்வார்கள். எனவே, ''முதலில் அடக்கம் செய்யப்பட்டு, பின் இரண்டாம் முறையாகவும் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இப்போது இறப்போரை அடக்கம் செய்துகொள்வாhகள்'' என இயேசு ஓர் முரண்பாட்டு வகையான செய்தியைச் சிலேடையாகக் கூறியதாகப் பொருள்கொள்வதும் வழக்கம். எப்படியாயினும், இயேசு இங்கே ஒரு புரட்சிகரமான போதனையை வழங்குகிறார். அதாவது, குடும்பக் கடமைகளையும் பொறுப்புகளையும் அப்படியே விட்டுவிட்டு, இயேசுவைப் பின்செல்ல வேண்டும். இறையாட்சியைப் பற்றி அறிவிக்கும் கடமை குடும்பக் கடமைகளை விடவும் முக்கியமானது. இவ்வாறு இயேசு போதித்தது அக்கால சமூக-சமய அமைப்புகளைப் புரட்டிப் போடும் விதத்தில் அமைந்திருந்தது. இன்றும் கூட, இயேசுவை முழு மனத்தோடு பின்பற்ற விரும்புவோர் சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து, இறையாட்சியின் மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் பங்கேற்பதற்கும் அதை உலகுக்கு அறிவிப்பதற்கும் முன்னுரிமை அளிக்க எங்களுக்கு அருள்தாரும்.