யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் திங்கட்கிழமை
2023-10-02

நற்செய்தி வாசகம் தூய காவல் தூதர்கள் நினைவுக்கு உரியது.
முதல் வாசகம்

கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 1-8

அந்நாள்களில் படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கின்றேன்; அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்." ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ‘உண்மையுள்ள நகர்’ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ‘திருமலை’ என்றும் பெயர்பெற்று விளங்கும்." படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்." படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப் போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர். படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்; அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.”

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைக் கட்டி எழுப்பி மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
திருப்பாடல் 102: 15-17. 18,20,19. 28,21-22

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். - பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். - பல்லவி 28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திபா 103: 21
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

சிறியோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்... !

இன்றைய காலத்தின் ஓர் அறிகுறி தலைமைப் போட்டி. கட்சிகளில், நிறுவனங்களில், பள்ளிகளில், ஏன் மறைமாவட்டங்களிலும்கூட தலைமைப் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் பலர் போட்டி போடுகின்றனர். தாங்களே தலைமைப் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் என்று எழுதுகின்றனர், ஆள் திரட்டுகின்றனர். தங்களுக்குத் தலைமைப் பொறுப்பு கிடைக்காவிட்டால், இன்னொரு தலைவரின்கீழ் பணி செய்ய மாட்டோம். அவரையும் பணி செய்ய விடமாட்டோம் என்று சூளுரைக்கும் பலரையும் இன்று பார்க்கிறோம். திருச்சபைக்குள்கூட இந்த நோய் நுழைந்துவிட்டது. ஆனால், இயேசுவின் பார்வை வேறானதாக இருக்கிறது. இயேசு ஒரு குழந்தையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட அவருடைய சீடர்கள் நிச்சயம் வியப்படைந்திருப்பார்கள். விவிலிய வரலாற்றில் சிறியோரை இறைவன் உயர்த்தி தலைமைப் பொறுப்பை வழங்கிய நிகழ்வுகள் ஏராளம். எனவே, யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவும், அவர்களின் தலைமையின் கீழ்த் தாராளமாகப் பணிபுரியவும் நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்கள் என்று நாம் கருதுபவர்களைக்கூடத் தலைவர்களாக ஏற்றுப் பணிபுரிய நாம் முன் வரும்போதுதான் நாம் உண்மையில் இயேசுவின் சீடர்கள். சிறியோரைத் தலைவராக ஏற்கும்போது, நாம் இயேசுவையே தலைவராக ஏற்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

மன்றாட்டு:

தாழ்ந்தோரை உயர்த்தும் இறiவா, உம்மைப் போற்றுகிறேன். தாழ்நிலை நின்ற அடியார்கள் பலரையும் நீர் உயர்த்தி, தலைமைப் பொறுப்பில் அமர்த்திப் பெருமைப்படுத்தியிருக்கிறீர். அதற்காக உம்மைப் புகழ்கிறேன். சிறியோர் எவரையும் உம் பெயரால் தலைவர்களாக ஏற்கின்ற நல்ல மனதை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.